
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி காவல் துறையினர், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓங்கி ஒலித்த நிலையில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அங்கிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அலுவலகத்திலிருந்த கோப்புகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில் சிபிசிஐடி காவல் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமும் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் அறிக்கையை தயார் செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடியினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.