புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீது 2 வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீது  2 வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரி  முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீதான  இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர் ஏனாம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 12 ம் வகுப்பு படித்துள்ளதாக பொய்யான தகவல் தெரிவித்துள்ளதாக கூறி, அவருக்கு எதிராக மங்கா வீராபாபு என்பவர் ஏனாம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இதேபோல  முதியோர் இல்லம் நடத்துவதாகக் கூறி 1,600 சதுர மீட்டர் அரசு நிலத்தை  குத்தகைக்கு எடுத்த மல்லாடி கிருஷ்ணராவ், அதை கல்வி அறக்கட்டளை ஒன்றுக்கு உள்வாடகைக்கு விட்டு, மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக, கொண்டமுரி ஸ்ரீ ஹரிகுசுமகுமார் என்பவரும் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு புகார்கள் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் மல்லாடி கிருஷ்ணராவ் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி வாதிட்டார். 
பின்னர் நீதிபதி, குற்றச்சாட்டுகள் தொடர்புடைய இரண்டு புகார்களும் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டதாகவும், தாமதத்துக்கான காரணங்களைத் தெரிவிக்கவில்லை எனவும் கூறி, மல்லாடி கிருஷ்ணராவுக்கு எதிரான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in