ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!- என்ன காரணம்?

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!- என்ன காரணம்?

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சென்னை காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேடை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 18-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொன்னையன் தலைமையில் தீர்மான குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது, அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் வந்துள்ளார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஜெயக்குமாரின் ஆதரவாளரான பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து(59) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், நீ என்ன ஜெயக்குமாரின் ஆதரவாளரா என ஆபாசமாக பேசி அடித்து உதைத்தனர். காயமடைந்த மாரிமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஓ.பி.எஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் மாரிமுத்துவை தாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் மீது ஆபாசமாக திட்டுதல், முறையற்று தடுத்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் போது ஓபிஎஸ் ஆதரவாளரான கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பேரணியாக சென்று ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன் அங்கு வைத்திருந்த வரவேற்பு பேனர்களை கிழித்து சென்றனர். இது தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர் அளித்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in