மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து சட்டமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்களின் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை அந்த அலுவலகங்களுக்குள் மக்கள் பிரதிநிதிகள் செல்லக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறை ஆகும். அந்த வகையில் மயிலாடுதுறை எம்எல்ஏ அலுவலகத்தையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஆனால், யாரும் உள்ளே நுழையக்கூடாது என்ற விதிமுறையை மீறி சீல் வைக்கப்பட்ட அலுவலகத்தின் பக்கவாட்டு கதவு வழியாக, நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் உள்ளே சென்று, அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதுடன், ஆதரவாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தும் உபசரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது சமூக வலைதளங்கள் வாயிலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து பட்டமங்கலம் விஏஓ பாலாஜி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இதுகுறித்து நேற்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி உள்ளே நுழைந்து விழா நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.
தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் மாநிலத்தில் முதல் முதலாக காங்கிரஸ் எம்எல்ஏ மீது விதிமுறைகளை மீறியதாக முதல் வழக்கு பாய்ந்திருப்பது அரசியல்வாதிகள் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.