
திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. திமுக மற்றும் தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் வேண்டாம் என்றும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்கு விலக்களிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும், அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி அனுப்பிவைத்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் மாணவர்களிடம் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற்று அதை மத்திய அரசுக்கு அனுப்பும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்துட்டு துவங்கி வைத்த அந்த இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் 50 நாட்களில் 50 லட்சம் மாணவர்களிடம் கையெழுத்து பெற திமுக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்காக மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படுவதாக தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அடுத்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.