எச்.ராஜாவையும் வி.பி.துரைசாமியையும் நீக்கிவிட்டு என்னை நீக்கச் சொல்லட்டும்!

சவுண்டு குறையாமல் ரவுண்டு கட்டும் சைதை சாதிக்
சைதை சாதிக்
சைதை சாதிக்

சென்னை கே.கே.நகரில் அக்டோபர் 26-ம் தேதி திமுக பொதுக்கூட்டம். இதில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் பேசுகையில், பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுகுறித்த வீடியோ வைரலானது. நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், ஆபாசப் பேச்சு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களின் மானத்திற்கு பங்கம் விளைவித்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையே சைதை சாதிக்கை கைதுசெய்யக்கோரி போராட்டம் நடத்தி கைதாகும் அளவுக்கு சூழல் சென்றது. இப்படியான சூழலில் சைதை சாதிக்கிடம் காமதேனு இணையதள செய்திகளுக்காகப் பேசினோம்.

குஷ்பு
குஷ்பு

எத்தனை ஆண்டுகளாக திமுக பேச்சாளராக இருக்கிறீர்கள்?

நான் இருபது ஆண்டுகளாக திமுக மேடைகளில் முழங்கி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இப்படி சர்ச்சையாகியுள்ளது. அதிலும் நான் தனிப்பட்ட வகையில் வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துவிட்ட பின்பும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பது வருத்தம் அளிக்கிறது.

பாஜகவில் இருக்கும் நடிகைகளுக்கு எதிராக மிகவும் கொச்சையான வார்த்தைகளைப் பிரயோகிப்பதுதான் மேடை நாகரிகமா?

நான் பேசியதில் துளிகூட உள்நோக்கம் கிடையாது. நான் பேசிய பேச்சை முழுவீடியோவாகப் பார்த்தால் புரியும். “அந்தப் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை டி.ஆர்.பாலு, சீதாபதி, பல்ராமன் போன்றவர்கள் வளர்த்தார்கள் என்றுசொல்லிவிட்டு, பாஜகவை குஷ்பு, நமீதா, காய்த்ரி ரகுராம் போன்ற ’ஐயிட்டம் டான்சர்ஸ்’ வளர்க்க வந்துள்ளார்கள்” எனச் சொல்லவந்தேன். ’ஐயிட்டம் டான்சர்’ என்றால் சினிமாவில் ஒரு பாடலுக்கு தலைகாட்டி ஆடிச் செல்பவர்கள் என்று அர்த்தம். ஆனால் வேகமாகப் பேசும்போது ’டான்சர்’ என்னும் பின்னொட்டு சொல்லை, சொல்லாமல் விட்டுவிட்டேன். கூட்டத்தில் இருந்த மக்கள் கைதட்டினார்கள். உடனே நான் சுதாகரித்துக் கொண்டு அதேமேடையிலேயே, “நான் வேறு எந்த தவறான அர்த்தத்திலும் பேசவில்லை. என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்” எனவும் சொன்னேன். இதுவும் வீடியோவில் உள்ளது.

இந்த விவகாரத்தில் கனிமொழி அக்கா மன்னிப்புக் கேட்டார். குஷ்பு சங்கடத்தில் இருப்பதை அறிந்து மறுநாள் நானும் ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டேன். இந்தியா டுடே டிவி சேனல் என்னையும், குஷ்புவையும் தொலைபேசி வழியாக அழைத்து நேரலையில் இதுகுறித்துக் கேட்டார்கள். அப்போதும் நான் குஷ்புவிடமே நேரலையில், ”நான் தவறான அர்த்தத்தில் பேசவில்லை. அதையும் மீறி மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனச் சொன்னேன். நான் அப்படிச் சொன்ன பின்பும் அவர் என்னை கண்டபடி பேசினார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை.

குஷ்புவிடம் நான் இன்னொரு விஷயத்தையும் சொன்னேன். அவர் திமுக, காங்கிரஸில் பயணித்தபோதும் அவரைக் குறித்து எதிர்முகாம் எவ்வளவு தரம்குறைந்த விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். எச்.ராஜா உங்களைப்பற்றிப் பேசிய அவதூறுப் பேச்சுகள் இன்னும்கூட யூடியூப் தளங்களில் இருக்கிறது. தமிழ் பெண்கள் திருமணமே ஆகாமல் உறவுவைத்துக் கொள்ளலாம் எனப் பேசியபோது, இப்போது உங்கள் பின்னால் இருப்பவர்கள்தான் உங்களைத் தாக்க முனைந்தனர். அப்போது அரணாக நின்றது திமுகவும், அதன் தொண்டர்களும்தான் என்பதையும் தெரிவித்தேன். இது திட்டமிட்டு நான் பேசியதில்லை. என் பேச்சில் ஒரு வார்த்தையை சொல்லத் தவறியதால் ஏற்பட்ட சிறுபிழை. இது கவனக் குறைவுதான் என தெளிவும்படுத்தினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இப்படியெல்லாம் வம்பு வளர்வதால் தானே உங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினே “பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை” என்று பொதுக்குழுவில் எச்சரித்தார். இந்தப் பிரச்சினைக்குப் பின் முதல்வரைச் சந்தித்தீர்களா?

இது விஷயமாக திமுகவில் இருந்தே எனக்குக் கடுமையான கண்டணங்கள் வந்தன. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினே என்னை அழைத்துக் கடுமையாகக் கண்டித்தார். கனிமொழி அக்காவும், அமைப்புச் செயலாளரும் கண்டித்தார்கள். நான் இதைத்தான் பேசவேண்டும் என நினைத்துப் பேசியிருந்தால் தப்பாக போயிருக்கும். ஆனால், நான் சொல்லவந்தது ஒன்று. அங்கு சொல்லப்பட்டது வேறு ஒன்று என்று ஆகிவிட்டது. நான் சாதாரண கழகப் பேச்சாளர். எந்த அதிகாரம்மிக்க பதவியிலும் இல்லை. இதை இந்த அளவுக்கு பெரும் பிரச்சினையாக்க வேண்டிய தேவை என்ன வந்தது என்பதுதான் மர்மமாக உள்ளது.

ஒருவேளை, பேசியது ‘சைதை சாதிக்’ என்பதுதான் பிரச்சினை என நினைக்கிறீர்களா?

நான் பேசியது இஸ்லாமிய மேடை இல்லை. நான் திமுக மேடையில் தான் பேசினேன். நாள்பட, நாள்பட பாஜக தொடுக்கும் அதிகபட்ச விமர்சனங்களைப் பார்க்கும்போது அப்படி இருக்குமோ என உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கே சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அண்ணாமலைதான் பதில் சொல்ல வேண்டும்.

பேச்சாளர்களுக்கு வழக்குகள் ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் ஆளும்கட்சி தான் எதிர்க்கட்சியினர் மீது வழக்குப் பாய்ச்சும். ஆனால், திமுக இதில் உங்களை கைவிட்டதுபோல் தெரிகிறதே?

தமிழக காவல்துறை எந்த அளவிற்கு சுதந்திரமாகச் செயல்படுகிறது என்பதற்கு என்மீது போடப்பட்டிருக்கும் வழக்கு ஒரு உதாரணம். தமிழக காவல்துறையை பாஜக தலைவர் அண்ணாமலை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்துகிறார். அறிவாலய அடிமையே... கோபாலபுர வாட்ச் மேனே என்றெல்லாம் விமர்சிக்கிறார். இந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு ஆளும் கட்சி பேச்சாளர் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது நல்லாட்சியின் உதாரணம். இனி இதையும் மேடைகளில் சட்டம் - ஒழுங்கு சாதனைகளைப் பேசும்போது கோடிட்டுக்காட்டிப் பேசுவேன்.

கடந்து வருவோம் என உடன்பிறப்புகள் என்னை ஆறுதல் மழையில் நனைக்கிறார்கள். எந்தக் கட்சியில், யார்தான் இப்படிப் பேசவில்லை எனக் கேள்வியும் கேட்கிறார்கள். மறைந்த காளிமுத்து, எஸ்.எஸ்.சந்திரன், இன்றைய அதிமுக பேச்சாளர்களின் பேச்சுகள் நினைவில் இருக்கிறதா? நான் பேசிய மறுநாளே பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நயன்தாரா குறித்து பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார். இதை ஏன் அண்ணாமலை கேட்கவில்லை? குஷ்புவும் கேட்கவில்லை? பெண்ணியம் அனைவருக்கும் பொதுவானதுதானே?

சசிகலா புஷ்பாவிடம், ஒரு பாஜக பிரமுகர் தவறாக நடந்து அவரது கணவரே கண்டித்து அறிக்கைவிட்டதை ஏன் பேசவில்லை? விழுப்புரம் பாஜக நிர்வாகி, பெண் நிர்வாகி ஒருவரை தவறாகப் பேசியபோது எங்கே போனார்கள்? இப்படியெல்லாம் சொல்லி என்னை நியாயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. என் தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறேன். என்னை திமுகவை விட்டு நீக்கவேண்டும் என அண்ணாமலையிடம் குஷ்பு சொன்னார் என்கிறார்கள். எச்.ராஜாவையும், வி.பி.துரைசாமியையும் நீக்கிவிட்டுத்தானே இதைப் பேசவேண்டும். என்னைமட்டும் சொல்வது அபத்தம் அல்லவா?

இரட்டை அர்த்தத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்துவதுதான் திராவிட மாடலா என்கிறார்களே..?

நீங்கள் தப்புத் தப்பாகப் பேசுவதும், நடந்து கொள்வதும் வீடியோக்களாக வருகிறதே. இது குஜராத் மாடலா என்றுதான் திருப்பிக்கேட்க வேண்டும். நான் செய்தது கவனக்குறைவு. இதற்கும் திராவிட சிந்தாந்த மாடலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

16 பாஜக தலைவர்கள் இந்தியாவில் இருக்கும் பெண் அரசியல்வாதிகளை எவ்வளவு கொச்சையாகப் பேசியிருக்கிறார்கள் என ஆங்கில நாளேட்டில் செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிராவில் நடிகை ஊர்மிளாவைப் பற்றியும், உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதியையும் கொச்சையாகப் பேசியுள்ளனர். 8 வயது பெண் குழந்தையை கோயில் கருவறையில் கொன்றுவிட்டு கொலையாளிகளைக் கைதுசெய்யக்கூடாது என அம்மாநில பாஜக தலைவர் ஊர்வலம் செல்கிறார். உபியில் ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு சடலத்தைக்கூட யாருக்கும் தெரியாமல் இரவில் கொளுத்தியதையெல்லாம் காலம் மன்னித்துவிடுமா? இதையெல்லாம் நான் எதிர்வாதமாகச் சொல்லவில்லை. எதையோ ஒன்றை மறைக்க, என் பேச்சைப் பிடித்துக் கொண்டார்களே என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.

உங்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைதாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முன் ஜாமீன் கோரியிருக்கிறீர்களா?

எனது வழக்கறிஞரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். அவரது அடுத்தகட்ட ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in