பரபரப்பு... கல்குவாரி ஏலத்தில் கலவரம்... கலெக்டர் முன்னிலையில் அமைச்சர் உதவியாளர் தாக்குதல்!

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தின்போது நடந்த தகராறு தொடர்பாக  அமைச்சர் சிவசங்கர் உதவியாளர் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம், நாரணமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில், கனிமவளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம், தொடர்பான டெண்டர் நேற்று (அக்.30 ) கோரப்பட்டது. 31 கல்குவாரிகள் ஏலமிடப்பட்டால் அதன் மூலம் அரசுக்கு பெரிய வருவாய் வரும், அதேபோல அதை எடுத்து நடத்துபவர்களுக்கும் கோடிக் கணக்கில் லாபம் கிடைக்கும் என்பதால்  இந்த ஏலத்தை எடுக்க கடும் போட்டி நிலவியது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டம்

மறைமுக ஏலம் தொடர்பான கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த டெண்டர் கோரி  அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். 

அந்த வகையில் இந்த டெண்டரில் பங்கேற்க, பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் வந்திருந்தார். கலைச்செல்வன் மற்றும் முருகேசன் என்பவரும், விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது, அங்கு முகமூடி அணிந்து வந்த சிலர், அவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தி தாக்கினர். திமுக அல்லாதவர்கள் டெண்டர் போடக்கூடாது என்பதற்காக அவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது

இந்த சம்பவத்தின்போது, கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து பொருட்களும் நாசமானதால்  ஆட்சியர் அலுவலகம், போர்க்களம் போல காட்சியளித்தது. அதைத்தொடர்ந்து ஆட்சியர் கற்பகம், தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்திவைத்தார்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரு தரப்பினர் இடையே நடந்த மோதல், சம்பவம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அடிதடி
அடிதடி

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன் என்பவர் தலைமையிலான,  பத்துக்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 148, 294, 323, 506(2), பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், இதுவரையில் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in