`மதுவால் பாலியல் வன்கொடுமை அதிகரிக்கிறது… கஞ்சாவை விற்பனை செய்யுங்கள்'- சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

`மதுவால் பாலியல் வன்கொடுமை அதிகரிக்கிறது… கஞ்சாவை விற்பனை செய்யுங்கள்'- சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ

“மது அருந்துவதால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதற்குப் பதிலாகக் கஞ்சா, பாங்கு போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்” என பாஜக எம்எல்ஏ-வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மஸ்தூரி தொகுதி பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி, “காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, வன்முறை போன்ற குற்றங்கள் பெருகி வருகின்றன. பொதுமக்கள் மதுபானங்களை குடிப்பதே இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதற்குக் காரணம். மதுபானங்கள் குற்றங்களை செய்ய மனிதர்களைத் தூண்டுகிறது. அதே சமயம் கஞ்சா, பாங்கு போன்றவற்றைப் புகைக்கும் போது இத்தகைய எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. பாங்கை உட்கொள்பவர் பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை எப்போதாவது செய்திருக்கிறார்களா?

எனவே சத்தீஸ்கரில் மதுபானங்களை ஒழித்துவிட்டு கஞ்சா, பாங்கு பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். போதை தேவைப்படும் நபர்களுக்குக் கஞ்சாவை அரசு விநியோகம் செய்ய வேண்டும். மது ஒழிப்பு நடவடிக்கைக்காக மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கஞ்சாவை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்” என கூறினார். பாஜக எம்எல்ஏவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

“இந்தியாவில் கஞ்சா பயன்படுத்த தடை இருக்கும் போது, ஒரு மக்கள் பிரதிநிதி கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்? இந்தியாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டுமெனில் மத்திய பாஜக அரசுக்கு அவர் கோரிக்கை விடுக்கட்டும்” என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in