நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது!

பிப்.4 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம் hindu கோப்பு படம்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன.

இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எங்கெங்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அந்தந்தப் பகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, வேட்புமனுக்களைப் பெறுவதற்கு தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை அளித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையின்போது 17-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 29-ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை வேலை நாள் என்பதால் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7 முனை போட்டி நிலவும் நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in