'அகம்பாவத்தோடு கட்சியை கைப்பற்றி விட்டோம் என நினைத்தால், இதுதான் நடக்கும்' - ஈபிஎஸ்சை எச்சரிக்கும் ஓபிஎஸ்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்கர்நாடகத் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள்; அதற்காக பாஜகவுடன் பேசி வருகிறோம் - ஓபிஎஸ்

மக்கள் மன்றத்தை நாடி, மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவை மீட்கப் போவதாகவும், அகம்பாவத்தோடு கட்சியை கைபற்றி விட்டோம் என நடந்துகொண்டால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என எல்லா தேர்தல்களிலும் தோல்வி மட்டுமே கிடைக்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘’ அதிமுகவின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண மக்களைத் தேடி எங்கள் பயணம் தொடரவுள்ளது. வரும் 24 ந் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. அதிமுக பிளவுபட்ட போதெல்லாம் இந்த இயக்கத்திற்கு யார் தலைமை வகிக்க வேண்டுமென்பதை மக்களே தீர்மானித்தார்கள்.

அப்படித்தான் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள் வந்தனர். அதிமுக அரசியல் மாயையில் சிக்கியுள்ளது, மக்கள் மன்றம் செல்லும் போது அந்த மாயை நிச்சயம் விலகும். ஈபிஎஸ் அணியினர் கூட்டியுள்ள செயற்குழு சட்ட விரோதமானது. இன்று வரை தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே உள்ளது. பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்,தற்போது வரை நேரம் ஒதுக்கப்படவில்லை, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிரதமரைச் சந்திப்பேன்.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்துக்கு எந்த ஒரு பதிலும் அளிக்க விரும்பவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், அதற்காக பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களில் நிச்சயமாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

திருச்சி மாநாட்டில் அதிமுக எதற்குத் துவங்கப்பட்டது என நிரூபணம் ஆகும். அடிப்படை உறுப்பினர்கள் மூலம் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட உரிமை. ஆனால் இன்றைய புதிய விதிமுறைகள் மூலம் போட்டியிட வேண்டும் என்றால் பணமூட்டையைத்  தலையில் வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கினால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற சூழல் உள்ளது.

அகம்பாவத்தோடு அவர்கள் கட்சியை கைபற்றி விட்டோம் என நடந்துகொண்டால் சட்டமன்றம் நாடாளுமன்றம் என எல்லா தேர்தல்களிலும் தோல்வி மட்டுமே கிடைக்கும். கட்சியின் நலன் கருதி மட்டுமே எங்கள் செயல்பாடு இருக்கும். அதிமுக இரத்தம் சிந்தி வளர்த்த கட்சி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல பிரச்சினைகளைத் தாங்கி வலுவான இயக்கமாக இந்தியாவில் இரண்டாவது எதிர்க்கட்சியாக உருவாக்கினார்.

அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அனைத்து மாவட்டங்களிலும் வைக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in