அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன செல்கிறதோ அதைத் தான் பின்பற்ற முடியும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
ஜன.1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நவ.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். அந்த வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 3.03 கோடி ஆண்களும், 3.14 கோடி பெண்களும், 7 ஆயிரத்து 758 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
அதற்கான சிறப்பு முகாம்கள் விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முடிவடைந்தன. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி, பெண் வாக்காளர்கள் 3.15 கோடி. மூன்றாம் பாலினத்தவர்கள் 8027 பேர் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் 3,310 பேர். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன செல்கிறதோ அதை தான் பின்பற்ற முடியும்" என்றார்.