5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மோடியின் அடுத்த வெற்றிக்கு அச்சாரமா?

மோடி
மோடி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கில் பாஜக வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அனைவரிடமும் எழுந்திருக்கும் முக்கியக் கேள்வி 2024-ல் இதே நிலை நீடிக்குமா என்பதுதான். காரணம், 2024 மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதி ஆட்டமாகத்தான் ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன.

அந்தந்த மாநில முதல்வர்களைக் காட்டிலும் பிரதமர் மோடியின் பிரச்சாரம்தான் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றது. சொல்லப்போனால், இந்தத் தேர்தல்கள் மோடியின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்பதற்கான ‘ரிப்போர்ட் கார்டு’ என்றே பார்க்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றித் தொகுதிகள் குறைந்திருந்தாலும், மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வரானதன் பின்னணியில் இருப்பது மோடியின் செல்வாக்குதான். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தான் போட்டியிட்ட சிராத்து தொகுதியில் அடைந்திருக்கும் தோல்வி, இந்தத் தேர்தல் முடிவுகள் வெறுமனே உபி அரசின் செயல்பாடு குறித்த மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டும் அல்ல எனத் தெளிவாகச் சொல்கிறது. உபியில் மட்டுமல்ல, உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களிலும் மோடியின் பெயரால்தான் வென்றிருக்கிறது பாஜக. 2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த தோல்வியால் சற்றே பின்னடைவைச் சந்தித்திருந்த பாஜக, இந்தத் தேர்தல் மூலம் கணக்கை நேர்செய்துவிட்டது.

விமர்சனங்களைக் கடந்த வெற்றி

உபியில், 1985-க்குப் பிறகு ஒரு முதல்வர் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுதான் முதல் முறை. கூடவே, மாநில அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தனது தனிப்பட்ட செல்வாக்கையும், தனது அரசின் கொள்கைகளையும் கேடயமாக முன்வைத்து யோகி அரசின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறார் மோடி.

கரோனா மரணங்கள், ஹாத்ரஸில் பட்டியலினச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம், வேலைவாய்ப்பின்மை எனப் பல்வேறு பிரச்சினைகள் யோகி அரசுக்கு எதிரான அஸ்திரங்களாக எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தப்பட்டன.

எனினும், இலவச ரேஷன் பொருட்கள், உஜ்வாலா திட்டத்தின்கீழ் காஸ் சிலிண்டர்கள், கல்வி உதவித் தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் போடப்பட்டது, கழிப்பறைகள் கட்டுமானம் என்பன உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பாஜகவுக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கின்றன. மத்திய அரசின் இந்தத் திட்டங்களை முறையாக அமல்படுத்துவதில் மாநில அரசு நிர்வாகத்தை யோகி சரியாகவே பயன்படுத்தினார். மறுபுறம், போலி என்கவுன்டர்கள் தொடர்பான விமர்சனங்கள் எழுந்தாலும், சட்டம் - ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளில் யோகி அரசு உறுதியாகச் செயல்பட்டதாகப் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மாஃபியாக்கள், ரவுடிகள் தொல்லைகள் இருக்காது எனும் பெண்களின் நம்பிக்கையும் பாஜகவுக்கான வாக்குகளாக மாறியிருக்கின்றன. பெண்களின் வாக்குகள்தான் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன என்று மோடி கூறியதன் பின்னணி இதுதான்.

“உத்தர பிரதேசம் என்னைத் தன்னுடையவனாக ஏற்றுக்கொண்டது. கங்கை அன்னை என்னை ஆசிர்வதித்துவிட்டாள். உத்தர பிரதேச மக்களாகிய நீங்களும் என்னை ஆரத் தழுவிக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்?” என்று உருகி உருகிப் பிரச்சாரம் செய்தார் மோடி. ‘இரட்டை இன்ஜின்’ என்று சொல்லியே மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி தொடர வாக்காளர்களின் மனதைக் கரைத்தார். உபியில் மோடி பிரச்சாரம் செய்த பகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 சதவீதம் பாஜகவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் உபியின் 80 தொகுதிகளில் 71-ல் பாஜக வென்றது. 2019 தேர்தலில் 64 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 325 தொகுதிகளில் வென்றது. இத்தனைக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு 32 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது சமாஜ்வாதி கட்சி. 2017-ல் வெறும் 21 சதவீதத்தைத்தான் அக்கட்சி பெற முடிந்தது. எனினும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினரின் வாக்குகளைத் திரட்டி வெற்றிபெற்றுவிடலாம் எனும் சமாஜ்வாதி கட்சியின் வியூகத்தை பாஜக முறியடித்துவிட்டது.

பாஜகவைப் பொறுத்தவரை வெற்றித் தொகுதிகள் குறைந்திருந்தாலும், வாக்கு சதவீதம் முந்தைய தேர்தலைவிட 2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2017-ல் 39.7 சதவீத வாக்குகளுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பாஜகவுக்கு இந்த முறை 41.6 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. வளர்ச்சி, நலத் திட்டங்கள் ஒரு பக்கம், மத ரீதியான அணிதிரட்டல்கள் ஒருபுறம் என பாஜக வகுத்த வியூகம் மிகச் சரியாகவே கைகொடுத்திருக்கிறது.

முதல்வர்களைத் தாண்டிய வெற்றி முகம்

“பிரதமரின் மக்கள் நலக் கொள்கைகள் மீது உத்தர பிரதேசத்து மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு இது” என்று மோடியின் பெயரில் வெற்றியைச் சமர்ப்பித்துவிட்டார் யோகி ஆதித்யநாத்.

உபியில் மட்டுமல்ல, 22 ஆண்டுகளுக்கு முன்னர் உதயமான உத்தராகண்டிலும் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை. முந்தைய தேர்தலைவிட குறைவான தொகுதிகளே கிடைத்திருந்தாலும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு விட்டது பாஜக. கோவாவில் தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியமைப்பதும் பாஜகவின் குறிப்பிடத்தக்க சாதனைதான். ஓர் ஆளுங்கட்சிக்கு அடுத்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. கோவா, மணிப்பூர் தேர்தல்களில் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக்கொண்டிருக்கும் பாஜக, ஆட்சி நடத்த கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திராத வண்ணம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது இன்னொரு சிறப்பம்சம்.

அதே வேளையில், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்பதை கடீமா தொகுதியில் அவருக்குக் கிடைத்த தோல்வியே சொல்லிவிட்டது. முதல்வர் தோற்றும் ஆளுங்கட்சி வென்றிருக்கிறது என்றால், அதன் பின்னணியில் இருப்பது மோடியின் செல்வாக்குதான். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூட 600 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்.

அதேபோல், மணிப்பூரின் முதல் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்ற என்.பீரேன் சிங், முன்பு காங்கிரசில் இருந்தவர். அங்கும் சாலை வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் என மத்திய அரசின் திட்டங்கள், மோடியின் செல்வாக்குதான் பாஜகவுக்கு வெற்றி தேடித் தந்தன. உபி தவிர, வெற்றிபெற்ற பிற மாநிலங்களில் முதல்வர் யார் என்பதைத் தேர்தலுக்குப் பின்னர்தான் கட்சித் தலைமை கூடி முடிவெடுக்கிறது. இவை அனைத்தும் பாஜக வெற்றியின் அசல் முகமாக மோடி இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

அடுத்த இலக்கில் கவனம்

இந்தத் தேர்தல் வெற்றிக்கு மோடிதான் முக்கிய ஆதாரமாக இருந்தார் என்பதைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு மரியாதை செய்துவைக்கப்பட்டது. நான்கு மாநிலத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாஜகவின் அடுத்த இலக்கு மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் டிசம்பரில் நடக்கவிருக்கும் தேர்தல். மகத்தான வெற்றியைக் கட்சிக்கு மீண்டும் தேடிக்கொடுத்த உற்சாகத்துடன் குஜராத் சென்ற மோடி, காந்திநகரில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். கையோடு அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். சொந்தத் தாயைச் சந்திப்பதைக்கூட ஒரு நிகழ்வாக மாற்றிக்கொள்ளும் மோடி, இதன் மூலம் பெண்களின் தார்மிக ஆதரவையும் பெற்றுவிடுகிறார்.

எதிர்க்கட்சிகள் தயாரா?

2024 தேர்தலுக்காக இப்போதே இத்தனை முஸ்தீபுகளுடன் மோடியும் பாஜகவும் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?

2021 மேற்கு வங்க சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவின் பகீரத முயற்சியையும் முறியடித்து திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மோடியை எதிர்கொள்ளப்போவது திரிணமூல் தான் என்பதாக மம்தா காட்டிக்கொள்ளத் தொடங்கினார். ஆனால், மேற்கு வங்கத்தைத் தாண்டி தனது எல்லைகளை விஸ்தரிக்க முயன்ற திரிணமூல் காங்கிரஸ் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. கோவாவில் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் துணையுடன் தனது பலத்தைக் காட்டிக்கொள்ள முயற்சித்த திரிணமூலுக்கு அங்கும் தோல்விதான் கிடைத்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைவிட விவசாயிகள் போராட்டம் மிக நீண்ட காலம், அதிகத் தொய்வில்லாமல் நடந்தது. ஆனாலும், அதை பாஜகவுக்கு எதிரான வாக்குகளாக மாற்ற எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. உபியில் மட்டுமல்ல, பஞ்சாபிலும் விவசாய அமைப்புகளின் அரசியல் பிரவேசம் கைகொடுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சிக்கு மம்தா வழங்கிய தார்மிக ஆதரவும் பலன் பெற்றுத் தரவில்லை.

ஒற்றுமையின்மை

பஞ்சாபில் ஒரு பிரளயத்தையே நிகழ்த்தி முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் என அனைவரையும் வீழ்த்துவிட்டது ஆம் ஆத்மி கட்சி. முந்தைய தேர்தலில் 23.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அக்கட்சி இந்த முறை 42 சதவீத வாக்குகளை வென்றிருக்கிறது.

அடுத்து தன்னை தேசிய அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. ‘கேஜ்ரிவால் மாடல்’, ‘டெல்லி மாடல்’ எனும் பதங்கள் பலமாக உச்சரிக்கப்படுகின்றன. முதல் வேலையாக வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் குஜராத் தேர்தலில் கவனம் செலுத்துகிறது அக்கட்சி. கேஜ்ரிவால் பிரதமர் ஆவார் என்று அக்கட்சியினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மூன்றாவது அணிக்கு முயற்சிக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், திரிணமூல் காங்கிரஸும் இதைக் கொஞ்சம்கூட ரசிக்கவில்லை.

கலகலத்துப்போன காங்கிரஸ்

காங்கிரஸைப் பொறுத்தவரை பஞ்சாபில் 15 சதவீத வாக்குகளையும், கோவாவில் 6 சதவீத வாக்குகளையும், உபியில் 4 சதவீத வாக்குகளையும், மணிப்பூரில் 19 சதவீத வாக்குகளையும் இழந்திருக்கிறது. உத்தராகண்டில் மட்டும்தான் முந்தைய தேர்தலைவிட 5 சதவீதம் அதிகமான வாக்குகளைக் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. எனினும் அங்கும் வெற்றிபெற முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் செய்த தவறுகள் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தன. பஞ்சாபில் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்குக்கும் இடையில் மோதல் வெடித்தபோது சித்துவுக்கு முழு ஆதரவு தந்தார் பிரியங்கா காந்தி. கட்சியின் மாநிலத் தலைவராக சித்துவை நியமிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்பி-க்கள் எழுதிய கடிதத்தைத் தலைமை கண்டுகொள்ளவில்லை. கடைசி நிமிடம் வரை தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முயன்ற சித்து, தானும் தோற்று கட்சியின் தோல்விக்கும் முக்கியக் காரணமாகிவிட்டார். அதேபோல், கோவாவில் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மறுத்து அதன் பலனை அறுவடை செய்திருக்கிறது காங்கிரஸ். விளைவாக, ஜி-23 தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

2022 தேர்தல் வெற்றி 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என முழு நம்பிக்கையுடன் மோடி பேச, “மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து கவனச் சிதைவை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் மத்தியில் தீர்க்கமான உளவியல் பாதிப்பை ஏற்படுத்த புத்திசாலித்தனமாக முயற்சிக்கிறார் மோடி” எனப் பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்தார். 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து மோடியை எதிர்கொள்ளும் என்பது பிரசாந்தின் நம்பிக்கை. ஆனால், கூட்டணி அமைக்கலாம் என மம்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்புக்குக் காங்கிரஸிடமிருந்து பதில் வரவில்லை. சமீபத்திய தேர்தல்களில் சாதித்திராத திரிணமூல் காங்கிரஸ் தலைமையேற்று வழிநடத்த இனி மற்ற கட்சிகளும் தயங்கும் என்றே கருதப்படுகிறது.

நமது சமூகம் இழந்ததை மீட்பதற்கு அடுத்த 25 ஆண்டுகள் முக்கியம் என முழங்கிவந்த மோடி, “இந்தத் தேர்தல் வெற்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கான மக்களின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலிக்கிறது” என்று டெல்லியில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பேசியிருக்கிறார். 2024-ம் அதற்குள் தானே வருகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in