தெறி வெற்றி: தென் இந்தியாவிலும் கொடி நாட்டுமா பாஜக?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மக்களவைக்கு 2024-ல் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மக்களவைக்கு முன்னோட்டம் என்று கருதப்பட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கில் வெற்றி பெற்று விஸ்வரூபம் காட்டியிருக்கிறது பாஜக.

அடுத்ததாக இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் 11 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களும் அடங்கும். வட இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சி மேலும் விரிவடைந்துவரும் நிலையில் தென் இந்தியாவில் பாஜகவின் நிலை என்ன? ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தென் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஆரம்பத்திலிருந்தே பாஜகவை வட இந்திய கட்சி என்று தென் இந்திய அரசியல்வாதிகள் அழைப்பதைக் கண்டிருக்கலாம். அதெல்லாம் வாஜ்பாய் - அத்வானி காலத்தோடு முடிந்துவிட்டது. 90-களிலேயே கர்நாடகத்தில் ஜனதா தளம் கரையத் தொடங்க, பாஜக மெதுவாக அங்கு வளரத் தொடங்கியது. தென் இந்தியாவில் பாஜகவுக்கு முதலில் வாசல் திறந்தது கர்நாடகம்தான். ஆனால், அம்மாநிலத்தைத் தவிர்த்த பிற தென் இந்திய மாநிலங்கள் பாஜகவுக்கு தொடர்ந்து சவாலாகவே விளங்கி வருகின்றன.

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உபியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அது 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வட கிழக்கு மாநிலங்களில் செல்வாக்கை நிலைநாட்டிவரும் பாஜக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் வலுவாக வேரூன்றும் எனும் நம்பிக்கையும் பாஜகவினரிடம் ஏற்பட்டிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகம்

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் மாநிலங்களில் முக்கியமானது தமிழகம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாங்கள் வேரூன்ற வேண்டும் என்று பாஜக தலைமை நினைத்தாலும், அதற்குத் தடையாக இருப்பது தமிழகம். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் தான் பிரதான கட்சிகள். எத்தனை புதிய கட்சிகள், கூட்டணிகள் புதிதாய் உதித்தாலும் எப்போதுமே இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தான் போட்டி. ஆனாலும் தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க அக்கட்சி பகீரத பிரயத்தனம் செய்துவருகிறது.

அதிமுகவோடு கூட்டணியில் பயணித்துக்கொண்டே திமுக Vs பாஜக என்ற நிலையை ஏற்படுத்த, பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. உபியில் சமாஜ்வாடியை ‘குண்டா ராஜ்ஜியம்’ என்று பாஜக பல ஆண்டுகளாக முன்னெடுத்த பிரச்சாரம், இப்போது கைக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த பாணியில் கடவுள் மறுப்பு, பகுத்தறிவைத் தொட்டு பேசும் திமுகவுக்கு எதிராக ‘இந்து விரோத கட்சி’ என்ற பிரச்சாரத்தை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அது தமிழகத்தில் இனி அதிகரிக்கலாம்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருப்பது, தமிழகத்திலும் அக்கட்சி முளைவிடத் தொடங்கிவிட்டது என்ற பேச்சுக்கு வலுசேர்த்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலை பாஜக அதிமுகவோடு எதிர்கொள்ளவே செய்யும். இந்த முறை 10 தொகுதிகள் வரை கேட்டு அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கலாம். திமுக கூட்டணியில் இது அப்படியே உல்டாவாக மாறலாம். மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் பலவீனமாக இருந்தாலும் காங்கிரஸை திமுக தோளில் சுமக்கக் காரணம், டெல்லி அரசியலுக்கு காங்கிரஸ் தேவைப்படுவதுதான். மதச்சார்பற்ற அணி என்ற பிம்பத்தைக் கட்டமைக்கவும் காங்கிரஸின் உதவி திமுகவுக்குத் தேவைப்படுகிறது. என்றாலும் தமிழகத்தில் காங்கிரஸுக்குத் தொடர்ந்து சீட்டுகளை திமுக குறைத்துவரும் நிலையில், 2024-லும் அந்த எண்ணிக்கையை இன்னும் குறைக்க முயற்சி செய்யும்.

கேரளம்

தமிழகம் போல பாஜகவுக்குக் குடைச்சல் தரும் இன்னொரு மாநிலம் கேரளம். ஆனால், தமிழகம் அளவுக்குக் கேரளம் கிடையாது. 2014-க்கு முன்பு வரை 10-க்கும் குறைவான சதவீத வாக்குகளையே பாஜக அங்கு பெற்றுவந்தது. ஆனால், மோடி - அமித் ஷா யுகத்துக்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக ஸ்திரமாகப் பெற்று வருகிறது. அந்த வாக்குகளை தொகுதிகளின் வெற்றியாக மாற்றுவதில்தான் பாஜகவுக்கு சிக்கல்.

இங்கு இடதுசாரிகளும், காங்கிரஸும் பிரதான கட்சிகளாக உள்ள நிலையில், பாஜக தங்களுடைய வழக்கமான பாணியில் வளர முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்தில் முருகனையும், வேலையும் பாஜக கையில் எடுத்ததுபோல கேரளத்தில் ஐயப்பன் கோயிலுக்குப் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தைக் கையில் எடுத்தது. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய திரிபுரா, மேற்கு வங்காளத்தில் பாஜக பின்பற்றிய இரு துருவ அரசியல் பாணியையும் கருத்தியல் ரீதியான அரசியலையும் கேரளத்தில் முன்னெடுக்க முடியவில்லை. இங்கு சிறுபான்மையினர் அதிகம். ஆகவேதான், கேரளத்தில் பெண்களையும், இளைஞர்களையும் கவர்வதில் பாஜக ஆர்வம் காட்டிவருகிறது. பெண்களை ஒருங்கிணைக்க சுய உதவிக் குழுக்கள், இளைஞர்களைக் கவர கலாச்சாரக் குழுக்கள் உருவாக்குவதை பாஜக மெதுவாக செய்துவருகிறது.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவின் இந்த உத்திகள் இன்னும் வேகம் பிடிக்கலாம். அகில இந்திய அளவில் பாஜகவை இடதுசாரிகளும், காங்கிரஸும் ஒரு சேர எதிர்த்தாலும், கேரளத்தில் இந்த இரு தரப்பும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பதால், அந்த இடைவெளியைப் பயன்படுத்தி பாஜக வளர எத்தனிக்கிறது. 2021-ல், காங்கிரஸ் இங்கு ஆட்சியைத் தவறவிட்டதன் மூலம் தென் இந்தியாவிலும் சவாலைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு கட்சியின் வாக்கைக் கரைத்துத்தான் பாஜக பல மாநிலங்களில் வளர்ந்திருக்கிறது. காங்கிரஸ் - இடதுசாரியின் பரஸ்பர மோதல் அதற்கு பாதை அமைத்துக்கொடுக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

கர்நாடகம்

கர்நாடகத்தில் பெரிய கட்சிகள் என்றால் பாஜகவும், காங்கிரஸும்தான். தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்குக் கொஞ்சமேனும் நம்பிக்கையளிக்கும் மாநிலமும் கர்நாடகம்தான். தற்போது தேர்தல் நடந்த 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. மாறாக, காங்கிரஸோ கையில் இருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்து நிற்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைக்கும் பாணியை கர்நாடகத்திலும் தொடர பாஜக தீவிர முயற்சி செய்யும். இப்போதே பாஜக 150 தொகுதுக்கும் மேல் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்படத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களிடம் பேசிப் பேசி மனதைக் கரைக்கும் ‘சிந்தன் பைதக்’ எனும் நிகழ்ச்சிகளை பாஜக தொடங்கிவிட்டது. ஹிஜாப் அணியும் பிரச்சினை கர்நாடகத்தில் உருவெடுத்த விவகாரம் தேர்தல் வரை நீடிக்கலாம்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கூட்டாக எதிர்கொண்டு கிடைத்த மோசமான அனுபவம், பிறகு குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரம் போன்றவை இந்த இரு கட்சிகளையும் எதிரும் புதிருமாக மாற்றிவிட்டன. ஆனால், பாஜகவின் அதீத வளர்ச்சியால் இங்கு இந்தக் கட்சிகள் ஈகோவை விட்டுவிட்டு கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட வேண்டும். தமிழகம் போல வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற கோஷங்களை முன்னெடுப்பதன் மூலம் பாஜகவுக்கு நெருக்கடி தரலாம். தமிழகம் மட்டும் குரல் கொடுத்துக்கொண்டிருந்த நீட் விவகாரத்தை குமாரசாமி பேசத் தொடங்கியிருப்பது ஒரு ஆரம்பமாக அமையலாம். ஆனாலும், வாக்குகள் சிதறினால் பாஜகவுக்கு லாபம் என்பதை காங்கிரஸ் உணராத வரையில் சிக்கல்தான்!

தெலங்கானா, ஆந்திரம்

தெலங்கானா மாநிலம் அமைந்த பிறகு, அதனால் உருவான வாக்கு வங்கி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு (டிஆர்எஸ்) அனுகூலமாக இருந்தது. ஒன்றுபட்ட ஆந்திரத்தின் பெரிய கட்சிகளாக இருந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் வாக்குகளைக் கரைத்து டிஆர்எஸ் செழித்து வளர்ந்தது. ஆனால், அந்தத் தேனிலவுக் காலம் முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலையில் இருந்த டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக பாஜக வளரத் தொடங்கிவிட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் தெலங்கானாவில் வென்ற பாஜக, கடந்த ஆண்டு ஹூசூராபாத் தொகுதி இடைத்தேர்தலில் வென்று டிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக கொடுத்த கடும் போட்டியும் தெலங்கானாவில் பாஜகவின் செல்வாக்கு உயர்வதைக் காட்டுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே அண்மைக் காலமாக சந்திரசேகர ராவ் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசத் தொடங்கியிருக்கிறார். இன்னொரு பக்கம் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவும் தெலங்கானாவில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். ஷர்மிளாவின் வளர்ச்சி பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கர்நாடகத்தைத் தொடர்ந்து தெலங்கானாவில் அதிர்வலைகளை ஏற்படுத்த பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலங்கானாவில் அதிரடித் திருப்பங்கள் நிகழலாம்.

ஒன்றுபட்ட ஆந்திரமாக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, இங்கு தெலுங்கு தேசத்தின் முதுகில் ஏறித்தான் பாஜக வெற்றிகளைப் பெற்று வந்திருக்கிறது. பாஜகவோடு தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு இங்கு பாஜக தள்ளாடுகிறது. காங்கிரஸ் வாக்குகளை அப்படியே ஜெகன்மோகன் ரெட்டி விழுங்கிவிட்ட நிலையில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைக்கு வந்துவிட்டன. தேசியக் கட்சிகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை என்பதைப்போல ஆந்திரத்திலும் மாநில கட்சிகளான தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. எனினும், பாஜக குவித்துவரும் தொடர் வெற்றிகளால் அக்கட்சி குறித்த அணுகுமுறையை அவை மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in