
பாஜக கூட்டணியிலிருந்து தந்திரமாக கழன்றுகொண்ட அதிமுகவுக்கு புதிதாக கைகோக்க கைகள் சிக்கவில்லை. அதனால், அந்தக் கட்சி மெகா கூட்டணியை அமைக்க வழி தெரியாமல் திணறுவதாக அரசியல் அரங்கில் பேச்சு எழுந்திருக்கிறது.
ஜெயலலிதா இருந்தவரைக்கும், ‘கூட்டணிக்கு அழைக்கமாட்டார்களா அம்மா...’ என்று அனைத்துக் கட்சிகளும் காத்துக் கிடக்கும். பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கும் அதுதான் நிலைமையாக இருந்தது. அவரது மறைவுக்குப் பின்னர், நிலைமை தலைகீழானது. கட்சி முழுவதும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாகிப் போனது.
இருந்த போதும், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் வலுவான கூட்டணியை அமைத்து களம்கண்டது அதிமுக. முக்கியமாக, கூட்டணியே கிடையாது எனச் சொல்லிக் கொண்டிருந்த பாமக, அவர்களுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்த தேமுதிக போன்ற கட்சிகளையெல்லாம் 2019 மக்களவைத் தேர்தல் கூட்டணிக்குள் கொண்டுவந்தார் இபிஎஸ். 2021லும் வலுவான கூட்டணியை அமைத்து திமுகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது அதிமுக.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகதான் பெரிய கட்சி. ஆனாலும் அதிமுக கூட்டணியில் இருந்த தலைவர்கள் பெரும்பாலானோர் பாஜக தலைமையோடு நெருக்கமாக இருந்தார்கள். முக்கியமாக, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேமலதா, கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் அதிமுக தலைமையை விடவும், பாஜக தலைமை மீது அன்பை வாரி பொழிந்ததை பார்க்க முடிந்தது. இப்போது கூட்டணி முறிந்துவிட்டதால் இவர்களில் சிலருக்கு எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியவில்லை.
பாஜக கூட்டணியை உதறியதால அதிமுகவுக்கு அம்மா காலத்து செல்வாக்கு வந்துவிட்டதாக கொண்டாடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஏனென்றால், பொதுவெளியில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதை எல்லாம் இத்தனை காலமும் சகிக்க முடியாமல் சகித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமயம் பார்த்து பாஜக கூட்டணிக்கு முடிவுரை எழுதினார் இபிஎஸ்.
பாஜக கூட்டணியிலிருந்து விலகியதால் திமுக கூட்டணிக்குள் புழுக்கத்துடன் இருக்கும் புதிய கட்சிகளும் தங்களை நோக்கி வருவார்கள் என எதிர்பார்த்தது அதிமுக. ஆனால் இப்போதுவரை, புரட்சிபாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, ஓவைசி இந்த இருவரைத் தவிர வேறு யாரும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சிகூட அதிமுகவை திரும்பிப் பார்க்கவில்லை.
தமாகா, புதிய தமிழகம், தமிமுன் அன்சாரியின் மஜக போன்ற கட்சிகள் இன்னும் உறுதியான முடிவை சொல்லவில்லை. பாமகவும் தேமுதிவும் கூட்டணி விஷயத்தில் இன்னும் வாயைத் திறக்கவில்லை. ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் பாஜக அணியிலேயே இருப்போம் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பெரிய கட்சியான அதிமுக அமைக்கும் கூட்டணியில் இருந்தால் தான் தங்களுக்கு பலம் என பல கட்சிகள் நினைக்கின்றன. ஆனாலும், அதிமுக பக்கம் போனால் வேறு வழிகளில் பாஜக தங்களுக்கு நெருக்கடி கொடுக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வியூகத்தை அதிமுக உருவாக்கவேண்டும்.
ஜெயலலிதா இருந்தவரை தேசிய அளவில் பல்வேறு தலைவர்களோடு இணக்கமான உறவு வைத்திருந்தார். அதற்கான நெட்வொர்க்கிங் அவரிடம் இருந்தது. இது மாநிலத்தில் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு நம்பிக்கையை கொடுத்தது. தற்போது இபிஎஸ்சுக்கு பாஜகவை தவிர தேசிய அளவில் யாரோடும் அறிமுகம் இல்லாதது மிகப்பெரிய மைனஸ். இந்தச் சூழலில் பாஜகவை எதிர்த்து அவர் மூர்க்கமாக போராட ஆரம்பித்தால் தேசிய அளவில் அதிமுகவுக்காக குரல்கொடுக்க ஆள் இல்லை. அத்தகைய கட்டமைப்பை இபிஎஸ் உருவாக்கி வைக்கவில்லை. அதிமுகவை நெருங்க நினைக்கும் கட்சிகளுக்கு இதுவே பெரும் சிக்கலாக தெரிகிறது.
அதேசமயம், தங்களை விட்டால் அதிமுகவுக்கு வேறு வழியில்லை என்பதை பாஜக நன்கு புரிந்துவைத்திருக்கிறது. அதனால் தான் இத்தனைக்கும் பிறகும் அதிமுக கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடர்கிறது பாஜக. அந்த முயற்சிகள் தோற்றுப் போனால் வழக்கம் போல பாஜக அதன் வேலையை காட்டும். இதையெல்லாம் சமாளித்து பாஜக அல்லாத ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய சவால் இப்போது அதிமுகவுக்கு எதிரே நிற்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல், “அதிமுக வலுவான கூட்டணியை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள்கூட எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களும் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.
அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான கட்சி. பாஜகவே இங்கே அதிமுக கூட்டணியில்தான் இருந்தது. இதை அமித் ஷாவும் ஜே.பி.நட்டாவுமே சொல்லி இருக்கிறார்கள். எனவே, அதிமுகவோடு கூட்டணி அமைக்கவே தமிழக கட்சிகள் விரும்புகின்றன. அந்த வகையில், தேர்தல் நெருக்கத்தில் தமிழகத்தின் நலன் கருதி திமுகவுக்கு எதிராக எங்களோடு பெரும்பாலான கட்சிகள் கைகோப்பார்கள்.
நான் இப்போது நாகை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளராகவும் உள்ளேன். சமீபத்தில் அந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள இஸ்லாமிய மக்கள் வாஞ்சையுடன் அதிமுகவினரை வரவேற்றனர். அதிமுகவுக்கு பக்க பலமாக நிற்போம் என அவர்கள் உள்ளத்திலிருந்து சொல்கிறார்கள். இத்தனை நாளும் சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்கு வர தடையாக இருந்தது பாஜக கூட்டணிதான். நாங்கள் கூட்டணியிலிருந்து வெளிவந்த பின்னர் எங்களுக்கு சிறுபான்மையினர் மக்களின் ஆதரவும் பெருகிவருகிறது.
தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகவும் திமுகவும்தான் பிரதான கட்சிகள். ஆனால், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்... அது போலத்தான் இயல்பு நிலை தெரியாமல் தமிழகத்தில் தங்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு உள்ளதாக பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான விடை வரும் தேர்தலிலேயே கிடைக்கும்.
பாஜக கூட்டணிக்குப் போனால் தங்களின் நிலைமை என்னாகும் என இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அவர்களுடன் சேரும் தற்கொலை முடிவை யாரும் எடுக்க மாட்டார்கள். திமுக ஆட்சி மீதுள்ள கடும் கோபத்தால் மக்கள் இப்போது அதிமுகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து விட்டனர். அந்த ஆதங்கத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் தன்னிலை மறந்து அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்” என்றார்.
பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகியதால் தமிழக அரசியல் களம் மீண்டும் திமுக – அதிமுக என பரபரத்துக் கிடக்கிறது. திமுக வலுவான தனது கூட்டணியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக கூட்டணி வேண்டாம் என அதிரடியாக முடிவெடுத்த அதிமுகவுக்கு பலமான கூட்டணியை அமைக்க பல தடைகள் முன்னே நிற்கின்றன. அதையெல்லாம் தகர்த்து வலுவான கூட்டணியை எப்படி அமைக்கிறார் இபிஎஸ் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!