அமைச்சர் பிறந்தநாள் போஸ்டரால் மதுரை திமுகவில் புகைச்சல்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிறந்த நாளுக்காக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிறந்த நாளுக்காக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், திமுகவினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

‘சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும்’ என்ற ‘திருவிளையாடல்’ பட வசனத்தைப் போல, திமுக என்றாலே ‘கோஷ்டியூம், பூசலும்’ சேர்ந்தே இருக்கிறது. மதுரையில் அதைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் அது அப்பட்டமாக வெளிப்பட்டது. இவர் தான் போட்டியிட வேண்டும் என்பதை விட, இன்னாரெல்லாம் போட்டியிடக்கூடாது என திமுகவில் சிலருக்கு கட்டம் கட்டப்பட்டது. அதில் ஒருவரான திமுக மதுரை நகர நிர்வாகிகளில் ஒருவான எம்.ஜெயராம் , முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே முறையிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய வார்டை போராடிப் பெற்றார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இவர் துணைமேயராவார் என திமுகவினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன், துணைமேயர் ஆனார்.

இதே போல, மேயர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், வடக்கு நகர் மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜயலெட்சுமி மேயராவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், நிதியமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில், பொன்.வசந்த் மனைவி இந்திராணி மேயரானார். இதனால், நொந்து போன திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பலர், இந்திராணி மேயர் பொறுப்பேற்ற விழாவைப் புறக்கணித்தனர்.

இந்நிலையில், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பிறந்த நாளையொட்டி மதுரை நகர் முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், பொன்.முத்துராமலிங்கம் ஆதரவாளர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், " மார்ச் 7-ல் பிறந்த நாள் காணும் துரோகத்தை வென்று கழகத்தை காத்த மதுரையை மீட்டெடுத்த சுந்தரபாண்டியரே வாழ்க வாழ்கவே' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், போஸ்டரில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் பலர் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், பொன்.முத்துராமலிங்கம் படம் மட்டும் மிஸ்ஸிங்.

இதுகுறித்து பொன்.முத்துராமலிங்கம் ஆதரவாளர்கள் கூறுகையில், “திமுகவை விட்டு வெளியே சென்று பின் மீண்டும் கட்சிக்குத் திரும்பிய பலருக்கு திமுகவில் பல உயர்ந்த பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. ஆனால், பொன்.முத்துராமலிங்கத்திற்கு மட்டும் அது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இன்னமும் துரோகி பட்டம் குத்தப்படுகிறது வேதனையாக உள்ளது. இந்த நிலையில், இப்படி போஸ்டர் ஒட்டி சிலர் குளிர்காய்கிறார்கள். பொறுப்புடன் அதைத் தட்டிக் கேட்க வேண்டியவர்களும் அமைதிகாக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.

போஸ்டரில் புரட்சி செய்து பழகிவிட்ட மதுரைக்காரர்கள். போஸ்டரை வைத்து ஒரு கலகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இது எங்கு போய் முடிகிறது என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in