கனிமொழியின் கைக்கு எட்டாமல் போனதா சென்னை மேயர் பதவி?

ஆதரவாளர்கள் அடித்த பிறந்தநாள் போஸ்டரும் அரசியல் சலசலப்பும்
தூத்துக்குடி எம்.பி கனிமொழி
தூத்துக்குடி எம்.பி கனிமொழி

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கியது மட்டுமல்ல, பட்டியலினத்தவருக்கு அப்பதவி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலை உற்றுநோக்க வைத்திருக்கிறது. கூடவே, திமுகவுக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசியலுக்குள் வர திமுக எம்பியும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி விரும்புவதாக, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. அதற்கு மேயர் பதவி ஒரு கருவியாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. ஆனால், அதிரடி திருப்பமாக மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் காய்நகர்த்தல்கள் இருக்கின்றனவா?

திமுகவில் 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, 3-வது முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். மு.க.அழகிரி மதுரையில் வசித்து வருவதால், 2009-ல் அந்தத் தொகுதியில் போட்டியிட்டதைப் போலவே, சென்னையில் வசிக்கும் கனிமொழியும் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடவே விரும்பினார். ஆனால், அதற்கு முன்பே நாடார் சமுதாய வாக்குகளை மனதில் வைத்து, கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் தூத்துக்குடியைக் கேட்டுவிட்டதால், அதைச் சொல்லியே கட்சித் தலைமை தூத்துக்குடிக்குக் கனிமொழியை அனுப்பி வைத்தது. தொடர்ந்து டெல்லி அரசியலிலேயே இருப்பதால், அதிலிருந்து விலகி, மாநில அரசியலுக்குள் வர வேண்டும் என்பதே கனிமொழியின் எண்ணமாக இருப்பதாக அவருடைய ஆதரவாளர்களால் கூறப்படுகிறது. அதற்கு சென்னை மேயர் பதவியே ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று கனிமொழி திட்டமிட்டிருந்ததாகவும், தேவையென்றால், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராகிக்கொண்டிருந்தாகவும் சொல்கிறார்கள்.

போஸ்டரால் விளைந்த பொல்லாப்பு

தூத்துக்குடி எம்பியாக இருந்தாலும், கருணாநிதியின் மகள் என்ற அடிப்படையில் மாநிலம் முழுதுமே அவருக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளுக்கு முன்பாகத் தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, யதேச்சையாக சென்னை மேயர் பதவி குறித்து தன்னுடைய விருப்பத்தை அவர்களிடம் கனிமொழி வெளிப்படுத்தியிருக்கிறார். அதைவைத்து கனிமொழிதான் அடுத்த சென்னை மேயர் என்பதை உணர்த்தும் வகையில், ஜனவரி 5 அன்று அவரது பிறந்தநாளுக்கு அவருடைய ஆதரவாளர்கள் ஆர்வக்கோளாறில் போஸ்டர் அடித்து அறிவாலயம் எதிரிலேயே ஒட்டி அமர்க்களப்படுத்தியிருந்தனர்.

கறுப்பு, சிவப்பு சேலையில், மேயர் உட்காருவதைப் போன்ற சீட்டில் கனிமொழி உட்கார்ந்திருப்பது போலவும், மேசையில் சென்னை மாநகராட்சி லட்சிணையுடன் கூடிய அழைப்பிதழ் இருப்பது போலவும் அந்தப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டருக்குப் பிறகுதான், மேயர் பதவி குறித்து திமுக கட்சி தலைமையில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் படபடக்கின்றன. தந்தை ஸ்டாலினைப் போல உதயநிதியும் மேயர் பதவியில் களமிறங்குவார் என்ற பேச்சு முன்பு திமுகவில் இருந்தது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்த பிறகு, சென்னை மேயர் பதவி குறித்து பேச்சு அடங்கிவிட்டது. அதையெல்லாம் மனதில் வைத்துதான், மேயர் பதவியைப் பெறலாம் என்ற யோசனை கனிமொழிக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அந்தப் போஸ்டர்
அந்தப் போஸ்டர்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றதால், மாநகராட்சி தேர்தலிலும் எளிதில் வெற்றி கிடைக்கும் என்ற எண்ணம் இருந்ததால், துணிந்து களமிறங்கவும் கனிமொழி முடிவு செய்திருந்ததாகவும் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. கனிமொழியின் பிறந்தநாள் போஸ்டருக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி மேயர் பதவி குறித்து தீவிரமாக முதல்வர் குடும்பத்தினர் விவாதித்து, கடைசியில் பட்டியலினத்தவருக்கு சென்னை மேயர் பொறுப்பை ஒதுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக, கனிமொழி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

முன்னேற்பாடு இல்லை...

1996-க்குப் பிறகு சென்னை மேயர் பதவி செல்வாக்குள்ள பதவியாகப் பார்க்கப்பட்டு வருகிறது. 1996, 2001-ல் மு.க. ஸ்டாலினே அந்தப் பதவியை ஏற்றதால், அந்தப் பதவி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. 2006-ல் தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயரானார். கட்சி இளைஞரணியில் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான மா.சு.வை மேயராக்குவது என்பதைப் பல மாதங்களுக்கு முன்பே திமுக முடிவு செய்திருந்தது. 2002 சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மா.சு.வுக்கு 2006-ல் சைதாப்பேட்டையில் போட்டியிட தொகுதியே கிடைக்காமல் போனது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த பாமகவுக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. மா.சு.வுக்கு மேயர் பதவி என்று முடிவெடுத்ததால்தான், தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குத் திமுக ஒதுக்கியது.

2006-ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது மேயர் பதவி தொடர்பாகக் கச்சிதமாக முடிவெடுத்து செயல்பட்ட திமுகதான், இந்த முறை அப்படி எந்த முன்னேற்பாடும் இல்லாமல், சென்னையைப் பட்டியலினத்தவருக்கு மாற்றியிருப்பதாகக் கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் குமைச்சல் ஏற்பட்டுள்ளது. உதயநிதி இல்லாவிட்டால், அவர் கைக்காட்டும் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்குதான் இந்தப் பொறுப்பு கிடைக்கும் என்றும் பேசப்பட்டது.

ரிப்பன் மாளிகை
ரிப்பன் மாளிகை

முக்கியத்துவம் வாய்ந்த பதவி

இதுதொடர்பாக, கனிமொழிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். “மற்ற மாநகராட்சி மேயர் பதவியைப் போல சென்னை மாநகராட்சி மேயர் பதவி கிடையாது. பெரும்பாலும் முதல்வரோடு இணைந்து மேயர் பணியாற்ற வேண்டியிருக்கும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த பதவியைப் பட்டியலினத்தவருக்கு ஒதுக்குவது என்று கட்சி தலைமை முன்பே முடிவு செய்திருந்தால், அது தொடர்பான நடவடிக்கைகள் வெளியே தெரிந்திருக்கும். கட்சி மேலிடம் நோட்டம்விட்டுப் பார்த்திருக்கும். மேயர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளவர் பற்றி சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குத் தெரியவந்திருக்கும். ஆனால், இப்போது அப்படி எதுவுமே நடக்கவில்லை. மேயர் பதவியைக் கனிமொழி எங்கே கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்திலும் அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கக் கூடாது என்பதற்காகவே அவசரத்தில் எடுத்த முடிவு போல உள்ளது. குறிப்பாக அந்தப் போஸ்டருக்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். கனிமொழி அக்காவுக்கு இதெல்லாம் தெரியாதது அல்ல. அவர் இதைப் பார்த்துக்கொள்வார்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் இப்படியொரு அதிருப்தி நிலவினாலும், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்டியலினப் பெண் யாராக இருப்பார் என்ற கேள்வி திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. கனிமொழி மகளிரணிச் செயலாளராகவும் இருப்பதால், சென்னையில் மேயர் பதவியைக் கைப்பற்றும் பட்டியலினப் பெண் தொடர்பாக கனிமொழியிடமே கட்சி நிர்வாகிகள் சிலர் கேட்டு வருவதாகவும், மகளிரணிப் பொறுப்பில் உள்ள ஒருவருக்கு இந்தப் பொறுப்பை கேட்டு வாங்கும்படி, கனிமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சென்னை மேயர் பதவி தொடர்பாக அறிவிப்பு வந்தவுடன், நடக்கும் நிகழ்வுகளை கனிமொழி அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

யார் மேயர் வேட்பாளர்?

அப்படியெனில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராகும் பட்டியலினப் பெண் யாராக இருக்கும்? திமுகவில் மட்டுமல்ல, அதன் கூட்டணி கட்சிகளிடமும் இந்தக் கேள்வி உள்ளது. மேயர் பதவிக்கான தேர்தல் மறைமுகமாகவே நடக்க உள்ளது. சென்னையில் 16 வார்டுகள் பட்டியலினத்தவருக்குப் பொதுவாகவும் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 16 வார்டுகள் பட்டியலினப் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக, இந்த 32 வார்டுகளில் இருந்துதான் ஒருவர், சென்னைப் பெருநகர மேயர் பதவிக்கு வர வேண்டும். ஸ்டாலின் 1996 - 2001 வரை சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, வார்டு கவுன்சிலராக இருந்த பட்டியலினப் பெண்களில் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்க உள்ளது என்பதுதான் அறிவாலயத்தில் தற்போது உடன்பிறப்புகள் மத்தியில் பலமாக அடிபடும் பேச்சு!

எப்படி இருந்தாலும் கனிமொழிக்கு இது பின்னடைவுதான். அவர் அடுத்து என்ன செய்வார் இன்னும் சில நாட்களில் தெரியவரும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in