பின்தங்கிய மாவட்டங்களில் புதிய ஆலைகள் தொடங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பின்தங்கிய மாவட்டங்களில் புதிய ஆலைகள் தொடங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

``வளர்ச்சித் திட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் புதிய காலணி கொள்கை 2022 வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய காலணி கொள்கையை வெளியிட்டார். புதிய காலணி கொள்கை 2022 மூலம் 37,450 பேருக்குப் புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், ஐந்து நிறுவனங்களுடன் 2,250 கோடி முதலீட்டில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் மெகா காலணி பொருட்கள் பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தத் துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை தொழில்துறை மாநாடுகள் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெற்றதில்லை. தொழில் துறையானது மிகச் சிறப்பானவர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். வளர்ச்சித் திட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும் என சில நாட்களுக்கு முன்னாள் ரிசர்வ் வங்கியினுடைய முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார். தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும் எந்த திட்டம் செயல்படுத்துவதாக இருந்தாலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் இருக்கும். பின்தங்கிய மாவட்டங்களில் புதிய ஆலைகள் தொடங்கப்படும். பசுமை ஹைட்ரஜன் கொள்கை, எத்தனால் கொள்கை, திருத்தப்பட்ட மின் வாகன கொள்கை, திருத்தப்பட்ட வான்வழி மற்றும் பாதுகாப்பு கொள்கை எனப் பல கொள்கைகள் விரைவில் வெளியிடப்படுகின்றன” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in