ராக்கி கயிறுகளிலும் புல்டோசர் படம்:யோகியின் நடவடிக்கையைப் பாராட்டும் உ.பி வியாபாரிகள்!

ராக்கி கயிறுகளிலும் புல்டோசர் படம்:யோகியின் நடவடிக்கையைப் பாராட்டும் உ.பி வியாபாரிகள்!

உத்தரப் பிரதேசத்தில் ரக்‌ஷா பந்தனையொட்டி கட்டப்படும் ராக்கி கயிறுகளில் புல்டோசர் படம் இடம் பெற்றுள்ளது. இது அம்மாநில முதல்வர் யோகியின் நடவடிக்கைகளுக்கு புகழ் தேடும் முயற்சி என்று கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் முக்கியத்துவம் பெற்ற பண்டிகையாக ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரி தன் சகோதரனுக்காக வாங்கி வைத்திருக்கும் ராக்கி கயிற்றை அவரது கைகளில் கட்டி மகிழ்கிறார். இதற்காக, சகோதரர்கள் தம் சகோதரிகளுக்கு மனமுவந்து பல்வேறு வகை உயர்ந்த பரிசுகளையும், ரொக்கமாகவும் அளித்து நெகிழ்ச்சியடையச் செய்வது உண்டு.

இதனால், ரக்‌ஷா பந்தன் பண்டிகை நெருங்கும் போது வட மாநிலங்களின் சந்தைகளிலும், கடைகளிலும் பல்வேறு வகையான ராக்கி கயிறுகள் விற்கப்படுகின்றன. இதில், ஒவ்வொரு வருடமும் உள்ள ‘டிரண்டுகள்’ ஏற்ப புதுப்புது வகையான ராக்கி கயிறுகளை அதன் தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்துவதும் வழக்கம்.

புல்டோசர் படம்

இந்தவகையில், இந்த வருடம் புல்டோசர் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறுகளைப் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. இது, பாஜக ஆளும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் புகழ் சேர்க்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

உ.பியில் முதல்முறையாக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக தனது முதல்வராக துறவியான யோகி ஆதித்யநாத்தை அமர்த்தியது. இவர், உ.பி குற்றப்பின்னணியாளர்களை முற்றிலும் ஒடுக்காவிட்டாலும் அவர்கள் மீது ஓரளவிற்கு நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக முதல்வர் யோகி, குற்றங்களில் சிக்குவோர் சொத்துக்களின் கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடித்தார். தப்பி ஓடியவர்களும், தலைமறைவானக் குற்றவாளிகளின் சொத்துக்களும் முதல்வர் யோகியின் புல்டோசர்களுக்கு இரையானது.

முஸ்லிம் அமைப்புகள் வழக்கு

இதில், இந்த புல்டோசரின் பின்னணிக்கு உ.பியில் பெருமளவு ஆதரவுகள் இல்லை. ஏனெனில், இந்த அதிரடி நடவடிக்கை உள்நோக்கத்துடன் முஸ்லிம்களை அதிகமாக குறிவைத்து செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. தற்போது இப்பிரச்சினையில் முஸ்லிம் அமைப்புகளால் உச்ச நீதிமன்றத்திலும் வழக்காகத் தொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், முதல்வர் யோகி தன் புல்டோசாரை நிறுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையை பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் கூட பின்பற்றத் துவங்கி விட்டன.

மோடி, யோகி படங்கள்

இதனால், புல்டோசர்களின் படங்களை மார்ச்சில் முடிந்த உ.பி சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜக முன்னிறுத்தியது. இதன் பலன் பாஜகவிற்கு வெற்றி கிடைத்தது. இச்சூழலில், ரக்‌ஷா பந்தன் பண்டிகையில் முக்கியத்துவம் பெற்ற ராக்கியிலும், புல்டோசர் புகுத்தப்பட்டுள்ளது. இதையும் உ.பி வாசிகள் ஆர்வமாக வாங்கத் துவங்கி விட்டனர். இவற்றைப் பெரும்பாலும் பாஜகவினர் வாங்கி புல்டோசரை பிரபலப்படுத்துகின்றனர். இதன் காரணமாக, புல்டோசருடனான ராக்கிகள் முதல் யோகியின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் புகழ் தேடும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

இதேபோல், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உ.பி முதல்வர் யோகியின் படங்கள் கொண்ட ராக்கி கயிறுகளும் சந்தைகளில் வியாபாரிகளால் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் உ.பிவாசிகள் ஆர்வமுடன் வாங்கி மகிழ்கின்றனர். இதற்கு முன் பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர்களான சல்மான்கான், ஷாருக் கான் ஆகியோரின் படங்கள் இடம்பெற்று ராக்கிகள் விற்பனையாக காலமும் உண்டு. இதிலும் அரசியல் நுழைக்கப்பட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் தற்போது ராக்கிகள் காணாமல் போகும் நிலையை பாஜக உருவாகி விட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in