அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை; வளர்ச்சியைப் பார்த்து மக்களே வாக்களிப்பார்கள்: மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்

பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023மத்திய திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்

அரசியல் அல்லாத வளர்ச்சி காணவே பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார். அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை. நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து மக்களே வாக்களிப்பார்கள் என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாப்புதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..., "கொரோனாவின் இக்கட்டான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். 75 ஆண்டு சுதந்திரத்திற்கு பின் கிடைத்த சிறந்த பட்ஜெட் இது. சீனா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களை ஒப்பிடுகையில் சிறந்து செயல்பட்டு மீண்டு வந்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தை கொண்டுள்ளது.

ரூ.13.5 லட்சம் கோடியில் பெரிய அளவில் போடப்பட்ட பட்ஜெட் இது. விவசாயம், நடுத்தர வர்க்கம், டிஜிட்டல் உள்ளிட்ட பல தரப்பட்ட கோணங்களில் போடப்பட்ட பட்ஜெட். இது அனைத்து துறைகளுக்குமான தொலைநோக்கு பட்ஜெட், இந்த பட்ஜெட் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்க உள்ளது.

இளைஞர் திறன் மேம்பாட்டுக்கு சிறந்த பட்ஜெட் இது. இந்த 9 ஆண்டுகளில் இந்தியா வெகு தூரம் பயணம் செய்துள்ளது. 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாடர்ன் பட்ஜெட் இந்தியாவை எதிர்காலத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஜிஎஸ்டி தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கும். அரசியல் அல்லாத வளர்ச்சி காணவே பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார். அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை, வளர்ச்சியை பார்த்து மக்களே வாக்களிப்பார்கள்" என்று அவர் கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in