மார்க்சிஸ்ட்டுகள் அதிர்ச்சி... புத்ததேவ் பட்டாச்சார்யா கவலைக்கிடம்: மருத்துவமனையில் நினைவை இழந்தார்!

புத்ததேவ் பட்டாச்சார்யா
புத்ததேவ் பட்டாச்சார்யாமார்க்சிஸ்ட்டுகள் அதிர்ச்சி... புத்ததேவ் பட்டாச்சார்யா கவலைக்கிடம்: மருத்துவமனையில் நினைவை இழந்தார்!

மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் தேர்தல் முறையின் மூலம் அதிக ஆண்டு ஆட்சியில் இருந்த கட்சி என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையில் இடதுமுன்னணி அரசு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. நிலச்சீர்த்திருத்தம், நிலமில்லா விவசாயிகளுக்கு நிலம் என சோசலிச பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மாநில ஆட்சி நடந்தது. இதன் அடிப்படையிலேயே பல்வேறு மாநிலங்களில் நிலச்சீர்த்திருத்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசின் முதலமைச்சராக செயல்பட்டவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதும், புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த 2015-ல் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார், அதன்பின் 2018-ல் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாததால் ஒதுங்கினார். அவருக்கு வயது 79 ஆகிறது. இந்த நிலையில், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாங்கள் அவரைப் பரிசோதித்து வருகிறோம். அவரது ஆக்ஸிஜன் செறிவு 70 சதவீதமாக மோசமடைந்ததால் சுயநினைவை இழந்துள்ளார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது " என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in