
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளருமாக இருந்த டாக்டர் மஸ்தான், கடந்த 22-ம் தேதி இரவு சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் அவரது மகன் ஹரிஸ் நவாஸ் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் டிரைவர் இம்ரான், நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மஸ்தான் தனது உறவினர்களுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார். இந்தப் பணத்தை அவர் திருப்பி கேட்டுள்ளார். இதனால் அவரை உறவினர்கள் காரிலேயே கொலை செய்தது தெரியவந்தது.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக் தகவல் வெளியானது. மஸ்தான் கொலையில் அவரது தம்பி கெளஷே ஆதம் பாஷாவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவரது செல்போன் ஆய்வு செய்தபோது சொத்துக்காக தனது அண்ணன் மஸ்தானை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.