`தம்பி அண்ணாமலை இப்படி பேசக்கூடாது'- சீமான் அட்வைஸ்

`தம்பி அண்ணாமலை இப்படி பேசக்கூடாது'- சீமான் அட்வைஸ்

"நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து அண்ணாமலை சொன்ன கருத்துகள் அநாகரிகமானது. தம்பி அண்ணாமலை போன்ற ஒரு படித்த அதிகாரி இப்படி பேசக்கூடாது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக பிரச்சினை நாளுக்கு நாள் வெடித்து வருகிறது. இதனிடையே, காலணி வீசப்பட்டது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தகாத வார்த்தையில் பேசுவீர்கள், ஆபாச வார்த்தைகளை பேசுவீர்கள். இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க நான் இயேசு கிறிஸ்து கிடையாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டிவிட்டு அடியுங்கள் என்று சொல்ல. நான் பதிலுக்கு அடிப்பேன்'' என்று காட்டமாக கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அண்ணாமலை சொன்ன கருத்துகள் அநாகரிகமானது. பிடிஆரால் இந்த மாநிலத்திற்கு கேடு என அவர் சொல்வார் எனில், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவற்றால் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரும்கேடு. தம்பி அண்ணாமலை போன்ற ஒரு படித்த அதிகாரி இப்படி பேசக்கூடாது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in