
மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் பாலப்பகுதியை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் பார்க்கிங், தோட்டம் அமைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் அனுமதி பெறாத கடைகள் மற்றும் கட்டிடங்கள் பலவும் இயங்கி வந்தன. இவை மாநகராட்சி சார்பில் அகற்றப்படுவதோடு, ஆக்கிரமிப்பவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் மத்திய தொகுதிக்கு உட்பட்ட பகுதி மதுரை திலகர்திடல் காவல்நிலையம் அருகே உள்ள மதுரா கோட்ஸ் மேம்பாலத்தின் கீ்ழ் பகுதியில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிலர் வைத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு அந்த கடைகள் அகற்றப்பட்டன.
ஆனால், தற்போது அதே பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேலிகளை அமைத்து அதனுள் சொகுசு கார்களை நிறுத்தி, தனது பயன்பாட்டிற்கான தோட்டமாகவும் பயன்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமித்துள்ள நபரின் பிண்ணனி என்ன? காவல்நிலையத்தின் அருகிலேயே அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டுகொள்ளாதது ஏன்? என பல்வேறு கேள்விகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.