135 பேர் பலியான பாலம் தொகுதி: மோர்பி வெற்றி சொல்வது என்ன?

மோர்பி பால விபத்து
மோர்பி பால விபத்து

மோர்பி பாலம் அறுந்துவிழுந்து 135 பேர் பலியான தொகுதியில் பாஜக சூடியிருக்கும் வெற்றி, அக்கட்சிக்கும் அதன் மாநில, மத்திய ஆட்சிகளுக்கும் சொல்லியிருக்கும் படிப்பினைகள் குறிப்பிடத்தக்கவை.

இரு கட்டங்களாக நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று நடந்தேறின. மாநிலத்தை ஆளும் பாஜக வெற்றியை தக்கவைத்துள்ளது. பல்வேறு நட்சத்திர தொகுதிகளின் வெற்றிகளுக்கு மத்தியில் மோர்பி தொகுதியில் பாஜக வென்றிருப்பது, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் ஆச்சரியம் தந்துள்ளது.

அக்டோபர் 30 அன்று மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் பாலத்தின் பரமாரிப்பு பணிகளை ஒப்பந்த நிறுவனம் சரிவர மேற்கொள்ளாததும், அவற்றை அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததுமே காரணம் என தெரிய வந்தது. இதனால் மாநிலத்தின் தலைமை செயலர் வரை நீதிமன்றத்தின் குட்டுக்கு ஆளானார்கள். மனித உரிமை அமைப்புகளின் விசாரணைகளும் தனியாக தொடங்கின.

கான்டிலால் அம்ருதியா
கான்டிலால் அம்ருதியா

மோர்பி பால விபத்து பாஜக வெற்றியை பாதிக்கும் என்றே எதிர்க்கட்சிகள் கணித்திருந்தன. ஆனால் அவற்றை தவிடுபொடியாக்கி மோர்பி தொகுதியில் பாஜக வெற்றி அடைந்திருக்கிறது. பாஜக வேட்பாளரான கான்டிலால் அம்ருதியா 1,13,701 வாக்குகள் பெற்று வாகை சூடினார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரான படேல் ஜெயந்திலால் 52,121 வாக்குகளுடன் தோல்வியடைந்தார். மோர்பி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றியடைந்திருப்பது அக்கட்சியின் தேர்தல் வியூகத்துக்கும், அமித் ஷா தலைமையிலான உத்தி வகுப்பாளர்களின் மதியூகத்துக்கும் சான்றாகி உள்ளது.

1995 முதல் 2012 வரை 5 முறை மோர்பி தொகுதியில் கான்டிலால் வெற்றிபெற்று வந்துள்ளார். 2017 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். நடப்பு சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தங்களிலும், மோர்பி தொகுதிக்கான பாஜக வேட்பாளர் பரிசீலனையில் கான்டிலால் இல்லை. அதிலும் மோர்பி பால உயிர்ப்பலிகளுக்கு பின்னர், ஆளும் பாஜக மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்ததில் மோர்பி தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் அழுத்தம் கூடியது. இதற்கிடையே பாலம் அறுந்து விழுந்தபோது மீட்பு பணிக்கான தன்னார்வலர்களில் ஒருவராக பங்கேற்ற கான்டிலால், தனது சாகச பணிகளை வீடியோவாக்கி சமூக ஊடகங்களில் வலம் வரவும் செய்திருந்தார்.

உடனடியாக, மோர்பி பால விபத்தின் மீட்பு பணிகளின் கதாநாயகன் என்ற அடையாளத்தோடு, கான்டிலால் அம்ருதியாவை மோர்பி தொகுதியின் வேட்பாளராக்கியது பாஜக. பால உயிர்ப்பலிகளின் துயரத்தையும் அதன் பின்னணியில் பாஜக மேல் விழ வாய்ப்பிருந்த கறையையும், இப்படி வேட்பாளர் தேர்வின் வாயிலாக சரி செய்ய முயன்றது பாஜக. இந்த வியூகம் அமோகமாய் எடுபட்டிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது. மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கான்டிலாலின் வெற்றி சாத்தியமாகியிருப்பதும், வேட்பாளர் தேர்வுக்கு அப்பால் மாநிலத்தில் எழுந்திருக்கும் பாஜக மற்றும் மோடிக்கு ஆதரவான அலையையே காட்டுகிறது.

இவை அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவை அசுர பலத்துடன் களமாடச் செய்யும். அத்தோடு குஜராத் தேர்தல் களத்தில் பாஜக அறிவித்த தனித்துவ திட்டங்களை செயல்படுத்தவும், தற்போதைய நிலைப்பாடுகளில் உறுதியாக முன்னேறவும் மக்கள் அளித்த அனுமதியாகவே கருதப்படும். ஆம் ஆத்மி கைக்கொண்ட இலவச தேர்தல் வாக்குறுதிகளை முற்றிலுமாக துறக்கவும் பாஜக இனி தலைப்படும். இலவசத்துக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு மேலும் உறுதிபடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in