குலத் தொழிலை மாற்றி யார் வேண்டுமானாலும் எந்த தொழிலும் செய்யலாம் என மாற்றிக் காட்டியவர் பெரியார் என ஏ2பி ஓனர் தெரிவித்த கருத்துக்கு எதிராக பெரியார் எதிர்ப்பாளர்கள் #BoycottA2B என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன்னணி சைவ உணவகங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது அடையார் ஆனந்த பவன். ஏ2பி என இளைஞர்களாலும் ஆனந்த பவன் என பெரியவர்களாலும் அழைக்கப்படும் இந்த உணவகம் 1979ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் முதலில் ஸ்ரீ ஆனந்தா என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
ராஜபாளையத்தை சேர்ந்த திருப்பதி ராஜாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகம் தற்போது தமிழ்நாடு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 150 இடங்களில் கிளைகளை பரப்பி உள்ளது. 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த உணவகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதன் உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா அண்மையில் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றை அளித்தார். நடிகர் சித்ரா லட்சுமணன், "ஒரு காலத்தில் இந்த சைவ உணவக தொழில் என்பது ஐயர்கள் கையில்தான் பெரும்பாலும் இருந்தது. அதன் பிறகுதான் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட்டது. எப்படி இந்த மாற்றம் நடந்தது?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஏ2பி உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா, "யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம் என்ற நிலை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தான். தந்தை பெரியார்தான் குலத் தொழில் முறையை மாற்றிக் காட்டியவர் .
எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். காலம் மாறுகிறது. அரசின் ஆதரவு கிடைக்கிறது. வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே செய்து வந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கடலில் யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம்" என்றார்.
ஸ்ரீநிவாச ராஜாவின் இந்த வீடியோவுக்கு பெரியார் எதிர்ப்பாளர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, #boycottA2B என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வந்தனர். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார்.
''உண்மையை பேசியதற்கு நன்றி" என குறிப்பிட்டு உள்ள அவர், A2B உணவகத்தில் சாப்பிடுவோம் என்ற அர்த்தம் தரும் விதமாக #WillEatAtA2B என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு உள்ளார். அந்த ஹேஷ்டேக்கை பலரும் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.