‘அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் காங்கிரஸின் சொத்துக்கள்’ - ராகுல் காந்தி உறுதி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இரு தலைவர்களும் காங்கிரஸின் சொத்துக்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஒவ்வொரு முறை நான் ஒரு மாநிலத்திற்குள் நுழையும் போதும், ​​​​ஒரு பிரச்சனை இருக்கும் என்று நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். இப்போது நீங்கள் ராஜஸ்தானில் ஒரு பிரச்சனை இருக்கும் என்று சொல்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இந்த யாத்திரை காங்கிரஸைத் தாண்டிச் சென்றுள்ளது. இது இப்போது இந்தியாவின் ஆழ்மன குரல். இது எங்கு சென்றடையும், எங்கு எட்டாது என்று யாராலும் சொல்ல முடியாது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரும் காங்கிரஸின் சொத்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக. ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அசோக் கெலாட், “ ஒரு துரோகியால் முதலமைச்சராக முடியாது. 10 எம்.எல்.ஏக்கள் கூட இல்லாத சச்சின் பைலட்டை உயர்மட்ட உத்தரவின் மூலமாக முதல்வராக்க முடியாது. அவர் கட்சிக்கு துரோகம் செய்தார், அவர் ஒரு துரோகி" என்று கூறினார். இதற்கு பதிலளித்த பைலட், கட்சியை ஒற்றுமையுடன் கொண்டு செல்லவேண்டிய நேரத்தில் ஒரு மூத்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது தகாதது என்று கூறினார்

காங்கிரஸ் கட்சியும் கெலாட்டின் கருத்தால் அதிருப்தியடைந்துள்ளது. இது குறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், "அசோக் கெலாட் சில வார்த்தைகளை பேட்டியில் பயன்படுத்தியிருக்கக் கூடாது. எங்கள் கட்சியை வலுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தால், அவற்றை எடுப்போம். சமரசம் செய்ய வேண்டும் என்றால், அதையும் செய்வோம்” என்றார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை டிசம்பர் 4-ம் தேதி ராஜஸ்தானில் நுழைய உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள இந்த மாநிலத்தில் அதன் இரண்டு பெரிய தலைவர்களுக்கிடையேயான உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in