உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமையுமா அரசு புத்தகப் பூங்கா?

உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமையுமா அரசு புத்தகப் பூங்கா?

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற தமிழ் அறிஞர்களுக்கான அரசு விருது வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்காவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பூங்கா உருவானால், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகும்'' என்று கூறியிருக்கிறார். அது அமையும் இடம் எது என்று முதல்வர் அறிவிக்கவில்லை.

எனினும், முதல்வரின் இந்தக் கனவுத் திட்டத்தை மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டின் போது, உலகத் தமிழ்ச்சங்கம் கட்ட தமுக்கம் மைதானம் அருகே 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கினார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். பிறகு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அந்த கட்டிடம் திறக்கப்பட்டது. ரூ.25 கோடியில் 80 ஆயிரம் சதுரடியில் தமிழ்ச்சங்கத்துக்கான பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டு வெறும் கட்டிடமாக அது காத்தாடிக் கொண்டிருக்கிறது. கீழடி அகழ்வைப்பகம் கட்டி முடிக்கப்படும் வரையில், அங்குள்ள பொருட்கள் தமிழ்ச்சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால்தான் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அங்கே வந்து செல்கிறார்கள். இல்லையென்றால், வெறும் பேய் பங்களா போல மாறியிருக்கும் அந்தக் கட்டிடம்.

உலகத் தமிழ்ச் சங்கத்தை முழுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றால், சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருப்பது போல இங்கும் ஆண்டு முழுவதும் நிரந்தர புத்தகக் காட்சி நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே தென்மாவட்ட தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். தற்போது முதல்வர் புத்தகப் பூங்கா திட்டத்தை அறிவித்திருப்பதால், அதனை இங்கே செயல்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

"ஒருவேளை புத்தகப் பூங்காவை சென்னை அருகே அமைக்க அரசு முடிவெடுத்தாலும், கூடவே மதுரையிலும் ஒரு பூங்கா அமைக்க வேண்டும். ஏனென்றால், சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்துத்தான் மதுரைக்கு அதுபோன்ற நூலகம் கிடைக்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. புத்தகப் பூங்காவும் அதேபோல மதுரைக்கு வர 10 ஆண்டுகளுக்கு மேலாகலாம். எனவே, சென்னையில் இத்திட்டத்தை நிறைவேற்றுகிற அதே காலகட்டத்திலேயே மதுரையிலும் புத்தகப் பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்" என்பது தென்மாவட்ட மக்களின் விருப்பமாக இருக்கிறது.

செய்யுமா தமிழ்நாடு அரசு?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in