முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்: நள்ளிரவில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன்காலால் பதறிய போலீஸ்

முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்: நள்ளிரவில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன்காலால் பதறிய போலீஸ்

தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக நள்ளிரவில் வந்த தொலைபேசி அழைப்பால் அலர்ட்டான போலீஸார், விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தேனாம்பேட்டை போலீஸார் அங்கு சென்று முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் சேர்ந்து இல்லம் முழுவதும் சோதனை நடத்தினர்.

மேலும் மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை செய்தபோது, செனாய் நகரில் உள்ள வீட்டின் முகவரி தெரியவந்தது. உடனே அங்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில, ஏற்கெனவே பலமுறை பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவனேஷ் என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவதும், அங்கு பணியாற்றக்கூடிய அன்பழகன் என்பவரது செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து புவனேஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. பின்னர் போலீஸார் புவனேஷை எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ளுமாறு காப்பக ஊழியரிடம் தெரிவித்தனர்.

புவனேஷ் மீது இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை, அபிராமபுரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் 9க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in