பாஜகவின் ஒரே கவலை தேர்தல்தான், மக்கள் பிரச்சினை அல்ல: மல்லிகார்ஜுன கார்கே சாடல்

பாஜகவின் ஒரே கவலை தேர்தல்தான், மக்கள் பிரச்சினை அல்ல: மல்லிகார்ஜுன கார்கே சாடல்

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாஜகவுக்கு கவலை இல்லை, தேர்தலில் வெற்றி பெறுவதுதான் அதன் ஒரே கவலை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்கு முன், பஞ்சாப் மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின் கடைசி நாளில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை நாடு எதிர்கொள்கிறது. பொருளாதார நிலைமை மோசமாகி வருகிறது. காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை இந்தப் பிரச்சினைகளை எழுப்புகிறது. பல்வேறு பின்னணிகள் மற்றும் தொழில்களைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பில் இணைகிறார்கள். யாத்திரையின் வெற்றியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. காங்கிரஸுக்கு எதிராக ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்

மேலும், “நாட்டின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவோ பாஜக உழைப்பதில்லை. தேர்தல்களில் எப்படி வெல்வது என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பொது மக்கள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப முற்படும் போது, அவற்றை விவாதிக்க அரசாங்கம் விரும்பவில்லை.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றி மட்டுமே அக்கட்சி விவாதித்தது. இரண்டு நாள் மாநாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலன் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. இதுதான் அவர்களின் ஒரே திட்டம், அவர்களுக்கு வேறு எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளைப் பற்றி பாஜக இப்போது பேசுகிறது, ஆனால் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்தபோது பிரதமர் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in