அண்ணாமலை கையில் இந்துத்துவா அஸ்திரம்?

தமிழகத்திலும் வேகமாக வளரும் பாஜக!
அண்ணாமலை கையில் இந்துத்துவா அஸ்திரம்?

இந்துத்துவா என்ற அஸ்திரத்தை வைத்து அகில இந்திய அளவில் தன்னை அசுரத்தனமாக வளர்த்துக் கொண்டே வருகிறது பாஜக. திராவிட மண் என்று சொல்லப்படும் தமிழகத்திலும் அதே அஸ்திரத்தைப் பயன்படுத்தி பாஜகவை வளர்த்தெடுக்கும் வேலைகளை அதிமும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் அதன் தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலை

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, “ எம்மதத்தையும் சமமாக கருதுவேன்” என்று உறுதிமொழி எடுத்தவர். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு அவரின் அந்த உறுதியை உதறிவிடச் செய்திருக்கிறது பாஜக. விளைவாக, அவர் தீவிர இந்துத்துவாவை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்தார். ஆயிரம் பேர் ஆயிரம் எதிர்க் கருத்துக்கள் சொன்னாலும் அண்ணாமலையின் இந்த முயற்சி அவருக்கும் அவர் சார்ந்த பாஜகவுக்கும் நன்றாகவே கைகொடுத்து வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் அப்பட்டமாய் உணர்த்தி வருகின்றன.

அண்மையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசு போட்ட தடையை எதிர்த்து கொதித்தெழுந்தார் அண்ணாமலை. “தடையை எதிர்த்து நானே நேரில் வந்து பல்லக்குத் தூக்குவேன்” என்று சூளுரைத்தார். இவருக்கு துணையாக பாஜகவின் எச்.ராஜா, மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் போன்றவர்களும் அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியதால் இந்த விவகாரம் மாநிலம் தழுவிய சர்ச்சையானது. இதைத்தான் அண்ணாமலையும் பாஜகவும் எதிர்பார்த்தார்கள்.

சிதம்பரத்தில் திரண்ட சிவனடியார்கள்...
சிதம்பரத்தில் திரண்ட சிவனடியார்கள்...

“இந்துக்கள் அனைவரும் தருமபுரத்தில் ஒன்றுகூடுவோம், பட்டினப்பிரவேசத்தை சிறப்பாக நடத்தி முடிப்போம்” என்று அண்ணாமலை ஆர்ப்பரித்ததால வழக்கமாக நூறுகளில் கூடும் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு இம்முறை ஆயிரக் கணக்கில் திரண்டார்கள் இந்துத்துவாவாதிகள். வருவேன் என்று சொன்னதோடு நிற்காமல் அண்ணாமலையும் எச்.ராஜாவும் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு மறக்காமல் வந்து கலந்துகொண்டார்கள். அண்ணாமலையே ஆதீனத்துக்கு பல்லக்கையும் தூக்கினார்.

இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சை கிளம்பியது. கிளம்பியது என்று சொல்வதைவிட கிளப்பப்பட்டது. சிதம்பரம் நடராஜரையும், தில்லைக்காளியையும் யூடியூப்பில் அவதூறாக பேசிய ஒருவரைக் கண்டித்து இந்துமதவாதிகள் சிதம்பரத்தில் ஆயிரக் கணக்கில் சிவனடியார்களைத் திரட்டினார்கள். இதில், பாஜக நேரடியாக தலையிடவில்லை என்றாலும் திரைமறைவில் இருந்து இந்து இயக்கங்களை இயக்கியதாகச் சொல்கிறார்கள்.

பல்லக்குக் தூக்கும் அண்ணாமலை...
பல்லக்குக் தூக்கும் அண்ணாமலை...

சிதம்பரம் போராட்டத்தில் பங்கேற்ற சிவனடியார்கள் சிலர், “அடுத்து வேறு ஒருவன் இந்து தர்மத்தின் மீது பேசுவதற்கு ஆசைப்படக்கூடாது. அப்படி செய்தால் எங்களின் கோபம் எப்படிப்பட்டது என்று காட்டும் நேரம் வந்துவிட்டது” என்றார்கள்.

இவை இரண்டும் அண்மையில் நடந்த நிகழ்வுகள். சாதாரணமாகவே இந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கும் கட்சிதான் பாஜக என்றாலும் இந்த அளவுக்கு அண்ணாமலை தீவிரம் காட்டி களத்தில் இறங்க ஆரம்பித்தது அமித் ஷாவின் தமிழக வருகைக்குப் பிறகு தான் என்கிறார்கள். சென்னையில் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்திச்சென்ற பிறகுதான் அண்ணாமலை தமிழக அரசை மிகக்கடுமையாக சாடுவதும், சவால் விடுவதும் அதிகரித்தது.

அண்ணாமலைக்கு முன்பாகவே முன்னாள் தலைவர் எல்.முருகனும் இதையெல்லாம் முயன்று பார்த்தவர் தான். ‘கந்த சஷ்டி கவசம்’ பாடலை `கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் இழிவுபடுத்திவிட்டதாக விவகாரம் கிளப்பிய எல்.முருகன், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வேல் யாத்திரை தொடங்கினார்.

வேல் யாத்திரையில் முருகன்...
வேல் யாத்திரையில் முருகன்...

தடையை மீறி இந்த யாத்திரையைத் தொடங்கிய முருகன், “இதற்கு முன்பு இந்து தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டால் எந்தக் கட்சியும் அதைத் தட்டிக்கேட்பதில்லை. திராவிட இயக்க மேடைகள் என்றால், அதில் இந்து தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட வேண்டும், இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இனிமேல் அது நடக்காது. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துபவர்களை பாஜக தட்டிக்கேட்கும் ” என்று எச்சரித்தார்.

முருகன் இப்படி எச்சரித்தது 2020 டிசம்பரில். இதைத் தொடர்ந்து 2021 பிப்ரவரி 22-ல் சேலத்தில் தமிழக பாஜக இளைஞரணி மாநாடு கூட்டினார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, "தி.மு.க ஒரு மோசமான, கொடூரமான சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கோயில்களைக் கொண்ட புனித பூமி தமிழ்நாடு. இங்கே ஒவ்வோர் அங்குலமும் புனிதமானது. இங்கு தமிழ் வாழ வேண்டுமென்றால் இந்துத்துவா வெற்றிபெற வேண்டும்” என்று சொன்னார்.

தருமபுரம் ஆதீனத்தில் அண்ணாமலை, எச்.ராஜா...
தருமபுரம் ஆதீனத்தில் அண்ணாமலை, எச்.ராஜா...

“இந்துத்துவாவை முன்னெடுப்பதால் மட்டுமே தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியும்” என்று சேலம் மாநாட்டில் பேசியதை அண்ணாமலை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டார். கரோனா காலத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தவர் அண்ணாமலை. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களைத் திறக்க விதிக்கப்பட்ட தடையை அரசு விலக்கிக் கொண்டதற்கு அண்ணாமலையின் போராட்டங்களும் முக்கிய காரணம்.

எல்.முருகன் யாத்திரை
எல்.முருகன் யாத்திரை

அடுத்ததாக, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கோயில் உடைப்பு மற்றும் கோயில்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த அண்ணாமலை, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்ற முயற்சித்தபோதும் சம்மன் இல்லாமல் உள்ளே வந்தார். இந்த விவகாரத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதில் பாஜக மற்றும் அண்ணாமலையின் பங்கு முக்கியமானது.

இதேபோல் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் அண்ணாமலை காட்டிய தீவிரம் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது மாநிலம் முழுவதுமே பாஜகவுக்கு இந்துக்களின் அபிமானத்தைப் பெற்றுத்தந்தது. சிறுபான்மையினர் பள்ளியில் படித்துவந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதை சரியான நேரத்தில் கையிலெடுத்து அரசியலாக்கினார் அண்ணாமலை.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, இந்துத்துவாவை பிரதானப்படுத்துவதால் பாஜகவால் தமிழகத்தில் ஒருகாலும் வேரூன்ற முடியாது எனச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது மாற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், அண்ணாமலையின் அண்மைக்கால நடவடிக்கைகளால் இந்துக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தான். திராவிடக் கட்சிகளுக்கு இது கசப்பான செய்தியாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுதான். உ.பியிலும் திரிபுராவிலும் அஸ்திவாரத்தைப் பலப்படுத்த மேற்கொண்ட அத்தனை உத்திகளையும் தமிழகத்திலும் பயன்படுத்த முடிவெடுத்துவிட்ட பாஜக, அண்ணாமலையின் கையில் அஸ்திவார கல்லைக் கொடுத்திருக்கிறது.

இதன் விளைவாக தற்போது பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் சார்ந்த கருத்துகள் தமிழகத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இணையத்தில் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளே அதிகம் பரவுகிறது. திராவிடக் கட்சிகள் அதிலும் குறிப்பாக, திமுக இந்து விரோத கட்சி என்ற விமர்சனம் அழுத்தமாக முன்வைக்கப்பட்டு பரப்பப்படுகிறது. ஆக, இந்துத்துவாவை பேசி இந்துக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து தன்னை மதம் சார்ந்த ஒரு கட்சியாக ஒளிவு மறைவில்லாமல் பகிரங்கப்படுத்திக் கொண்டே தமிழகத்தின் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது பாஜக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in