கர்நாடகாவில் பா.ஜ.க தோல்விக்கு இதுதான் காரணம்: திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்கர்நாடகாவில் பா.ஜ.க தோல்விக்கு இதுதான் காரணம்: திருமாவளவன்

``பாஜகவின் பிரிவினைவாத அரசியலை மக்கள் வெறுத்துவிட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகளே சான்று'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று இரவு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ‘’சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு’’ எனும் தலைப்பில் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘’ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டு களவாணிகளின் ஆட்சிதான் இந்தியாவை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. அவர்களுடைய சுரண்டல் வெறும் பொருளியல் சுரண்டல் மட்டுமல்ல. சாதி, மதத்தின் பெயரால் பிரிவினைவாதத்தின் சுரண்டலாகவும் வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் பாசிசத்துக்கு கூடுதல் பண்பு இருக்கிறது. இந்தியாவில் சனாதன பாசிசம் இருக்கிறது. சாதியின், மதத்தின் பெயரால் மக்களை பாகுபாடு செய்கிற பண்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. சனாதனத்தின் பண்பு பிறப்பின் அடிப்படையில் உழைக்கும் மக்களை துண்டு துண்டாக பிளவுபடுத்துகிற ஆபத்தான பண்புகளை கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த சமூக பெண்களாக இருந்தாலும் அவர்கள் ஆண்களுக்கு கீழானவர்கள், பெண் சமூகம் 100% சூத்திரர்கள் என வரையறை செய்துள்ளது சனாதனம். இன பாகுபாடு உலகில் வேறு எந்த தேசத்திலும் கிடையாது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 60 வயதில் பிரசவித்த பிள்ளைதான் பாஜக. பாஜகவை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போல சராசரி அரசியல் கட்சியாக பார்க்ககூடாது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை துருப்பு சீட்டாக வைத்துள்ள அவர்கள், இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக திசை திருப்புகிறார்கள். இந்துத்துவா என்பதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ், பாஜக ஒழிந்து கொள்கிறது.

தமிழகத்தில் தலித் ஒற்றுமையை சிதைத்து விட்டது சனாதனம். தீவிர இடதுசாரி அரசியல் பேசியவர்கள் எல்லாம் இப்போது வலதுசாரி அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவது மிக ஆபத்தானது. இன்று கர்நாடகாவில் காங்கிரஸை வெற்றி பெற வைத்தவர்கள் 40% இந்துக்கள்தான். அந்த மக்கள் பாஜக பேசிய மதப்பிரிவினை அரசியலை வெறுத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று. ஹிஜாப் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன் வைத்த பாஜக-வை மக்கள் தூக்கி எறிந்துள்ளார்கள். நமக்கிடையே எவ்வளவு முரண்கள் இருந்தாலும் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். கருத்தியல் முரண்கள் இருந்தாலும் பாஜக-வுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in