பாஜகவின் அழுக்கு அரசியல் ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தடுக்கிறது: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

பாஜகவின் அழுக்கு அரசியல் ஏழைக் குழந்தைகளின் கல்வியைத் தடுக்கிறது: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

டெல்லியில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு பாஜகவின் “அழுக்கு அரசியல்” இடையூறாக இருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, "இன்று நான் சோகத்துடனும் கோபத்துடனும் ஒரு உண்மையை முன்வைக்கிறேன், இப்போது ஏழைக் குழந்தைகளின் கல்வியையும் பாஜக தடுக்கிறது. அவர்கள் எங்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் முடிவுகள் 99.6 சதவீதத்தை எட்டியுள்ளது, அதில் ஆசிரியர்களின் பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது.

புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாங்கள் 1,100 ஆசிரியர்களை பிரிட்டன், சிங்கப்பூர் மற்றும் பின்லாந்துக்கு அனுப்பவுள்ளோம். அரசுப் பள்ளிகள் கூட எப்படி சிறப்பாக இருக்கும் என்பதை பின்லாந்து காட்டியுள்ளது. ஆனால், அவர்கள் (பாஜக) சேவைகள் துறையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். எனவே ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப நாங்கள் துணைநிலை ஆளுநருக்கு கோப்புகளை அனுப்ப வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும், "நாங்கள் மார்ச் மாதத்தில் 30 ஆசிரியர்களை பின்லாந்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது, ஆனால் துணை நிலை ஆளுநர் அதன் கோப்பினை திருப்பி அனுப்பினார். அதன் பிறகு நாங்கள் அதன் பதிலை அனுப்பினோம், அதன் பிறகும் இதன் செலவு-பயன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் மீண்டும் கோப்பினை திருப்பி அனுப்பினார். இது மிகவும் அபத்தமான வாதம்.

பிரதமர் மற்றும் அனைத்து முதல்வர்களும் உலகப் பொருளாதார மன்றத்திற்குச் செல்ல உள்ளனர், அதன் செலவு-பயன் பகுப்பாய்வைக் கண்டறியுங்கள். நாடு முழுவதிலுமிருந்து தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள், டெல்லி அரசாங்கம் ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்புகிறது. ஆனால், அவர்கள் எங்களைத் தடுக்கிறார்கள். நீங்கள் எப்போதும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் எந்தத் தடையையும் ஏற்படுத்த வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முதல்வர் மற்றும் துணை முதல்வரரால் தங்கள் ஆசிரியர்களை பயிற்சிக்கு அனுப்ப முடியாது என்றால், இந்த அரசு ஏன்?" அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in