மதுரை திமுகவினருக்கு வலைவிரிக்கும் பாஜக!

மதுரை திமுகவினருக்கு  வலைவிரிக்கும் பாஜக!

மதுரை மாநகராட்சியில் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள திமுக நிர்வாகிகளை பாஜகவில் சேரச்சொல்லி அதன் நிர்வாகிகள் தூது அனுப்பி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி தேர்தல் துவங்கியதில் இருந்தே நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் , திமுக நிர்வாகிகளுக்கும் முட்டலும், மோதலுமாக உள்ளது. மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோரின் சிபாரிசுகளை மீறி நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணிக்கு பதவி கிடைத்தது.

இதனால் துணை மேயர் பதவியையாவது வாங்கி விடலாம் என நினைத்த திமுக நிர்வாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக நிதியமைச்சர் செக் வைத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் துணைமேயர் ஆனார். இதன் பின்னணியில் நிதியமைச்சர்தான் இருந்தார் என்று திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மதுரையில் உள்ள 5 மண்டலத்தலைவர்களுக்கானத் தேர்தல் நடைபெற்றது. அதிலும் தங்களுக்குப் பதவி கிடைக்கவிடாமல், நிதியமைச்சர் செய்து விட்டார் என்று திமுக மாவட்ட நிர்வாகிகள் மாநில தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு வாசுகி, 2-வது மண்டலத்திற்கு சரவண புவனேஸ்வரி, 3-வது மண்டலத்திற்கு பாண்டிச்செல்வி, 4-வது மண்டலத்திற்கு முகேஷ் சர்மா, 5-வது மண்டலத்திற்கு கவிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாண்டிச்செல்வி, சரவண புவனேஷ்வரி ஆகியோர் நிதியமைச்சர் சிபாரிசால் மண்டலத்தலைவராகியுள்ளனர். அமைச்சர் மூர்த்தி தனது ஆதரவாளரான வாசுகிக்கும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தனது ஆதரவாளரான கவிதாவிற்கும் மண்டலத்தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் சிபாரிசு செய்ததில் முகேஷ்சர்மா மட்டும் மண்டலத்தலைவராகியுள்ளார்.

திமுகவில் பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ள எம்.ஜெயராம் மண்டலத்தலைவர் கனவில் இருந்தார். அவரது ஆசை நிராசையாகி உள்ளது. இதேபோல அவனியாபுரம் நகராட்சியில் மூன்று முறை வெற்றி பெற்ற போஸ் முத்தையாவிற்கும் மாநகராட்சி மண்டலத்தலைவர் பதவி வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் தனது மருமகள் விஜயமௌசுமிக்கு மேயர் பதவி கிடைக்கவில்லை என்பதால் மண்டலத்தலைவர் பதவியாவது வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல நிலைக்குழுத் தலைவர் பதவி கேட்ட மூத்த திமுக நிர்வாகிகளின் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் பதவி கிடைக்காத திமுகவினர் ஒன்று கூடி தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்த அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. தற்போது பாஜக மாவட்ட தலைவராக உள்ள டாக்டர் சரவணன் திமுகவில் இருந்தவர் என்பதால், அவரிடம் திமுக அதிருப்தியாளர் பட்டியலை எடுக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். ஆனால், நிதியமைச்சரின் சிபாரிசை மட்டும்தான் கட்சித்தலைமை பெரிதாக மதிக்கிறது. கட்சியில் திடீரென சேர்ந்தவர்களுக்கெல்லாம் மாநகராட்சி பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கட்சிக்காக பல ஆண்டுகளாக வேலை செய்த நிர்வாகிகளை ஓரங்கட்டும் வேலையை அமைச்சர் செய்யலாம். திமுக செய்யலாமா? அதனால் பலர் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளனர். அவர்களைப் பாஜகவினர் தொடர்பு கொண்டு வருவது உண்மைதான்" என்றனர். ஒரு பக்கம் திமுகவினரை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக, மறுபுறம் திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஸ்கெட்ச் போட்டு பாஜகவிற்கு தூக்கத் திட்டம் போட்டுள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.