``பாஜக தொண்டர்கள்தான் கட்சியின் உண்மையான பலம். தொண்டன் என்பது கட்சி பதவி, அது எப்போதும் நம்முடன் இருக்கும்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டாமன் - டையுவில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மாநாட்டில் காணொலி காட்சி உரையாற்றினார். அப்போது, “பாஜக தொண்டர்கள்தான் கட்சியின் உண்மையான பலம். பாஜகவின் அடிப்படை பலம் அதன் தொண்டர்கள்தான். தொண்டன் என்பது கட்சி பதவி, அது எப்போதும் நம்முடன் இருக்கும். ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.
பஞ்சாயத்துகள் நாட்டின் ஜனநாயக அமைப்பின் தூண்கள். சாமானியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாஜக தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பாஜக தொண்டர்கள் தங்கள் பணிச்சுமையை தங்களுக்குள் சமமாக விநியோகிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் மாவட்டத்தில் என்ன வளர்ச்சி நடக்கிறது என்பதை மற்றவர்களிடம் சொல்லுங்கள், மற்றவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் மூன்று சமூக பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் நான்கு மாதங்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஐந்தாண்டுகளில் இதுபோன்ற 15 பிரச்சினைகளை எளிதில் தீர்த்து வைப்பீர்கள்” என்று தெரிவித்தார்.
தாத்ராநகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பிரதமரின் உரையின் போது பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் உடனிருந்தார். கடந்த 15 நாட்களில் பாஜகவின் மூன்றாவது பஞ்சாயத்து ராஜ் பரிஷத் மாநாடு இதுவாகும். பாஜகவின் பஞ்சாயத்து ராஜ் கவுன்சிலின் முதல் கூட்டம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்டிலும், இரண்டாவது கூட்டம் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலும் ஆகஸ்ட் 12 அன்று நடைபெற்றது.