‘குஜராத்தில் பாஜக வென்றது இப்படித்தான்..’

தாக்கும் தாக்கரே!
‘குஜராத்தில் பாஜக வென்றது இப்படித்தான்..’

‘குஜராத்தில் பாஜக வென்றது இப்படித்தான்’ என்று உத்தவ் தாக்கரே மற்றும் அவரது ஊதுகுழலான சாம்னா பத்திரிக்கையில் சாடியுள்ளார்கள்.

குஜராத் சட்டப் பேரவை தேர்தலின் முடிவில் அம்மாநிலத்தின் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. குஜராத்தில் மீண்டும் பாஜக வென்றது குறித்து பல்வேறு காரணங்கள் பலதரப்பிலும் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் ’அண்டை மாநிலமான மகாராஷ்டிராவுக்கான திட்டங்கள் பலவும் குஜராத்துக்கு கடத்தி செல்லப்பட்டதே காரணம்’ என்றொரு காரணத்தை முன்வைத்துள்ளது ’சாம்னா’ இதழ்.

முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும், பிளவுற்ற சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை மேற்கோள்காட்டி சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழான சாம்னா இன்று(டிச.9) தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் வழக்கமான பாஜக எதிர்ப்பாட்டு, குஜராத் தேர்தல் முடிவுகளை ஒட்டி மேலும் கூர்மை அடைந்துள்ளது.

’வணிகம், பொருளாதாரம் என பலவகையிலும் பின்புலம் வாய்ந்த மகாராஷ்டிரா மாநகரங்களுக்கான பெரும் திட்டங்கள் பலவும், முறைகேடாக குஜராத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம். தற்போதைய மகாராஷ்டிர முதல்வர் ஃபட்நவிஸ் மற்றும் துணை முதல்வர் ஷிண்டே ஆகியோர் மாநிலத்துக்கு துரோகம் செய்யும் வகையில் அந்த வாய்ப்புகளை தாரை வார்த்துவிட்டனர். இப்படி அண்டை மாநிலங்களுக்கான பல்வேறு அனுகூலங்களை அபகரித்தே குஜராத்தில் வாக்குகளை குவித்திருக்கிறார்கள்’ என்று சாடி இருக்கிறது சாம்னா.

மேலும், ‘இதே போக்கில் கர்நாடக எல்லையை ஒட்டிய மகாராஷ்டிர கிராமங்களை அண்டை மாநிலத்துக்கு வழங்கவும் தற்போதைய முதல்வர், துணை முதல்வர்கள் தயாராக இருக்கின்றனர்’ என்றும் தாக்கியுள்ளது சாம்னா தலையங்கம். முன்னதாக வேதாந்தா-ஃபாக்ஸ்கான், டாடா ஏர்பஸ் மற்றும் பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் தொழில்தொடங்க இருந்ததை, மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் பாஜகவினர் குஜராத்துக்கு கடத்திவிட்டதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா குற்றம்சாட்டியிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in