
பாஜக பெண் உறுப்பினர்களைப் பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் (ஃபிளையிங் கிஸ்) கொடுத்ததாகவும் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.
மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று ராகுல் காந்தி பேசினார். அவர் பேசி முடித்ததும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும் போது அவர் மீது புகார் ஒன்றைக் கூறினார்.
‘‘ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறும் போது பாஜக பெண் உறுப்பினர்களைப் பார்த்து பறக்கும் முத்தம் (ஃபிளையிங் கிஸ்) கொடுத்தார். இது அவை நெறிமுறைகளுக்கு மாறான ஒழுங்கீனமான செயல். அவரது செய்கை அவரின் குடும்பமும் கட்சியும் பெண்களை எப்படி மதிக்கிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது. பெண்களை மதிக்காதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். நாடாளுமன்றத்தில் இது போன்ற கண்ணியமற்ற செயல் இதற்கு முன் நடந்தது இல்லை’’ என்றார்.
ராகுலுக்கு எதிரான அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்தக் குற்றச்சாட்டால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பாஜக பெண் உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ஷோபா கரந்த்லாஜே, ‘‘ராகுலின் செய்கை கண்டிக்கத்தக்கது. ராகுல் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்றார்.