உத்தவ் தாக்கரேவின் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: மகாராஷ்டிர இடைத்தேர்தலில் பின்வாங்கியது பாஜக!

உத்தவ் தாக்கரேவின் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: மகாராஷ்டிர இடைத்தேர்தலில் பின்வாங்கியது பாஜக!

மகாராஷ்டிராவின் அந்தேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே பிரிவின் வேட்பாளர் வெற்றிபெறும் வகையில் பாஜக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே-தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, முதல் தேர்தலாக மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த அந்தேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை பாஜக திரும்பப் பெற்றுள்ளது. நவம்பர் 3-ம் தேதி அந்தேரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது உத்தவ் தாக்கரே அணியின் வேட்பாளர் ருதுஜா லட்கே போட்டியின்றி வெற்றி பெறுவார்.

முன்னதாக நேற்று நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, "அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏ ரமேஷ் லட்கே மாரடைப்பால் இறந்த பிறகு, அவரது மனைவி தற்போதைய இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக எந்த வேட்பாளரும் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மறைந்த ஆன்மாவுக்கு மரியாதைக்குரிய அஞ்சலியாக இருங்கள். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். என்சிபி தலைவர் சரத் பவாரும் இது தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தார். மேலும், ஷிண்டே முகாமின் எம்எல்ஏ பிரதாப் சர்நாயக், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இதுபற்றி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில், அந்தேரி இடைத்தேர்தலில் இருந்து கட்சி தனது வேட்பாளர் முர்ஜி படேலை வாபஸ் பெறுவதாக பாஜக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே, “இறந்த சிட்டிங் எம்எல்ஏ அல்லது எம்பியின் உறவினருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாதது மகாராஷ்டிராவின் அரசியல் பாரம்பரியம். அதன்படி எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுகிறோம்” என்று அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே பிரிவு வேட்பாளரை போட்டியின்றி வெற்றிபெறச் செய்ததற்காக சரத் பவார் மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோருக்கு உத்தவ் தாக்கரே அணியின் தலைவரான அனில் பராப் நன்றி தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சியால் சிவசேனா சில மாதங்களுக்கு முன்பு பிளவுபட்டது. இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இரு அணிகளுக்கும் கடந்த வாரம்தான் புதிய தேர்தல் சின்னங்களையும், பெயர்களையும் தேர்தல் ஆணையம் வழங்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in