பாஜகதான் தனிப்பெரும் கட்சி... காங்கிரஸுக்கு பேரிடி; மத்திய பிரதேசத்தின் புதிய சர்வே!

பாஜகதான் தனிப்பெரும் கட்சி... காங்கிரஸுக்கு பேரிடி; மத்திய பிரதேசத்தின் புதிய சர்வே!

மத்திய பிரதேச மாநிலத்தில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

அங்கு இப்போது சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் நிலையில், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய பிரதேச தேர்தல் குறித்து இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் தற்போது அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க 116 இடங்கள் தேவை.

வரும் தேர்தலில் பாஜக 115 இடங்களில், அதாவது சரியாக 50% இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 109 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல அங்கே பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 110 இடங்களை வெல்லக்கூடும் என்று சர்வே கூறுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றிருந்த நிலையில், அதில் இருந்து 4 இடங்களை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சைகள் ஆகியவை ஐந்து இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த முறை போட்டி எந்தளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.

வாக்கு சதவிகித அடிப்படையில் பாஜகவுக்கு அதிகபட்சமாக 44.38 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் பின்னாலேயே வரும் காங்கிரஸ் கட்சிக்கு 42.51 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 13.11 சதவீத வாக்குகள் கிடைக்கும். முன்னதாக கடந்த 2018 தேர்தலில் பாஜக 41.02 சதவீதமும், காங்கிரஸுக்கு 40.89 சதவீதமும் பெற்றிருந்தது. மற்ற கட்சிகள் 18.09 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி கமல்நாத்
ராகுல் காந்தி கமல்நாத்

எந்த முதல்வர் வேட்பாளர் பெஸ்ட் என்ற கேள்விக்கு பாஜகவின் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக இந்தியா டிவி சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. அவர் முதல்வராகத் தொடர வேண்டும் என 44.32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அதேநேரம் காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கும் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. கமல்நாத் முதல்வராக வேண்டும் என 38.58 சதவீதம் பேர் கூறுகிறார்கள். பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 9 சதவீதம் பேர் ஆதரவாக இருக்கும் நிலையில், காங்கிரஸின் தலைவர் திக்விஜய சிங்கிற்கு 1.52 சதவீத ஆதரவு இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in