
``கிழக்கில் உதிக்கும் சூரியன், மேற்கில் வேண்டுமானாலும் உதிக்கலாம். ஆனால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்ற அண்ணாமலையின் கனவு பலிக்காவே பலிக்காது'' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாளாக இருக்கும் என்றும் கோயில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சிலை அகற்றப்படும் என்றும் கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லியவரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் திருச்சியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ’’ தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததும் இந்து அறநிலையத்துறை அகற்றப்படும் என கூறியுள்ளார். அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும். அதன்பிறகு சித்தப்பா என்று அழைக்கலாம். இதுதான் என்னுடைய பதிலாக இருக்கும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம். ஆனால் என்றைக்குமே பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே முடியாது.
சனாதனம் குறித்து ஏற்கெனவே எங்களுடைய பதிலை தெரிவித்துள்ளோம். எதையும் நாங்கள் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம். கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்களுக்கு எதிராக அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை பேசி வருகிறார்'' என்றார்.