
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் அறிவுறுத்தினார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜகவின் வெற்றியை 100 இடங்களுக்குள் குறைக்க முடியும் என்று கூறினார்.
பாட்னாவில் நடைபெற்ற சிபிஎம்-ன் 11வது பொது மாநாட்டில் பேசிய பிஹார் முதல்வர், "காங்கிரஸ் விரைவில் முடிவெடுக்க வேண்டும். எனது ஆலோசனையை ஏற்று ஒன்றாகப் போராடினால், பாஜக 100 இடங்களுக்கு கீழே சென்று விடுவார்கள், ஆனால் எனது ஆலோசனையை ஏற்கவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனது ஒரே லட்சியம் நாட்டை ஒருங்கிணைத்து, வெறுப்புணர்வை பரப்பும் நபர்களிடம் இருந்து விடுவிப்பதாகும். உண்மையில் எனக்கு எதுவும் வேண்டாம். நாங்கள் உங்களுடன் நிற்போம்" என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.