
டெல்லி தொடங்கி தமிழகம் வரை எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து, மத்திய விசாரணை அமைப்புகள் மும்முரம் காட்டுவது குறித்து ஆம் ஆத்மி கட்சி அபாய சங்கு ஊதியுள்ளது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் கசிகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இதர எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், விசாரணை மற்றும் கைது அச்சுறுத்தல்கள் காத்திருப்பதாக ஆம் ஆத்மி அடித்துச் சொல்கிறது.
ஆம் ஆத்மி ஆகப்பெரும் அச்சுறுத்தலா?
டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அவரை முடக்கியதற்கு அப்பால் அந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை. நீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் விசாரணை அமைப்புகளின் இழுத்தடிப்பு தொடர்கிறது.
டெல்லி துணை முதல்வரை தொடர்ந்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாகி இருக்கிறார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சியை கொண்டுவந்ததன் வாயிலாக, அர்விந்த் கேஜ்ரிவாலையும் வளைத்திருக்கிறார்கள். அவருக்கு எதிரான கைது முகாந்திரத்தை விட, அரசியல் கட்சி ஒன்று பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதை, இதர எதிர்க்கட்சிகள் கவலையோடு கவனிக்கின்றன.
ஆம் ஆத்மி மீதான பாஜகவின் தொடரும் அரசியல் வெஞ்சினம் தற்போது பெரும் விவாதத்துக்கு ஆளாகியிருக்கிறது. நாட்டின் தலைநகரில் பாஜகவுக்கு இடமளிக்காது, தொடர்ந்து ஆட்சியை பிடிப்பதோடு, இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பையும் ஆளுகைக்குள் கொண்டு வந்திருக்கிறது ஆஆக. ஊழல் ஒழிப்பு என்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தும் பாஜக, அதே முழக்கத்தில் தன்னை ஆஆக முந்திச் செல்வதை ரசிக்கவில்லை. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளை விட ஆம் ஆத்மியை முடக்க பாஜக பிரயத்தனம் காட்டுகிறது.
‘இந்தியா’வின் தலைவர்களுக்கு இக்கட்டா?
ஆம் ஆத்மி மட்டுமன்றி இந்தியா கூட்டணியின் இதர எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் மத்திய விசாரணை அமைப்புகள் நெருக்கி வருகின்றன. அவர்கள் வேகம் பார்த்து அரசியல் சூறாவளியான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட அடக்கி வாசிக்கிறார். ஆனபோதும், திரிணமூல் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி விழிபிதுங்கி கிடக்கிறார்கள்.
இந்த வரிசையில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் இணைய விரும்பாத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு அனைத்துமான தேஜஸ்வி யாதவ், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி முகாம்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை வளையங்கள் சூழ்ந்துள்ளன.
பாஜக மற்றும் மோடிக்கு எதிராக தீவிரமாக களமாடிய தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மீது திடீர் கரிசனம் கொண்டிருக்கிறது பாஜக. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக் கரங்கள் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா வரை நீண்ட போதும், தற்போதைக்கு அதற்கு கடிவாளம் போட்டிருக்கிறார்கள். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராவ் மற்றும் அவரது வாரிசுகள் இறங்கியடிப்பதை பாஜக ரசித்து வருகிறது.
சமாளிப்பாரா ஸ்டாலின்?
மாறாக, கேரள மற்றும் தமிழக முதல்வர்களுக்கு எதிராக அவர்களின் வாரிசுகள் வழியாகவே, வழக்குகளை தூசு தட்டப் பார்க்கிறார்கள். அதிலும் தமிழக முதல்வருக்கு எதிரான விசாரணை முதல் கைது வரையிலான ஆருடங்கள் டெல்லி வரை பரபரப்பாக பேசப்படுகின்றன. தற்போதைக்கு திமுக அமைச்சர்கள் பலர் மீதும் கண்வைத்திருக்கும் அமலாக்கத்துறை இறுதியாக முதல்வர் மற்றும் அவரது மகன், மருமகன் மீதும் பாய வாய்ப்பிருப்பதாக அந்த ஆருடங்கள் பரபரக்கின்றன.
ஆனால் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்பதையே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் பறைசாற்றுகின்றன. ’இந்தியா கூட்டணி’யை கட்டமைப்பதில் காட்டும் அக்கறையாகட்டும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான அரசியல் நகர்வுகளாகட்டும், இந்தியாவுக்கே முன்மாதிரியான சனாதன எதிர்ப்பாட்டாகட்டும்... இருவரும் அசந்ததாக தெரியவில்லை.
இருக்கும் சில மாத அவகாசத்தில் பாஜக என்ன செய்துவிடப்போகிறது என்ற மதர்ப்பும் திமுக தலைமைக்கு வந்திருக்கிறது. ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் முதல் ’தேர்தல் முடிவது வரை அவரே ஆளுநராக நீடிக்க வேண்டும்’ என்ற பகடி வரை திமுக அஞ்சுவதாக தெரியவில்லை. மாநில அரசியலுக்கும் அப்பால் பாஜகவுக்கு எதிரான ‘பாட்காஸ்ட்’ வாயிலாக தேசிய அளவிலும் பரப்புரையை ஸ்டாலின் தொடர ஆரம்பித்திருக்கிறார்.
பாஜகவுக்கு ஆதாயமா, அரசியல் காயமா?
5 மாநில சட்டப் பேரவை தேர்தல் மற்றும் அடுத்து வரும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றுக்கான முன்னேற்பாடுகளை விட, எதிர்க்கட்சிகளை முடக்க முயலும் பாஜகவின் நகர்வுகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் மீதான ஊழல் புகார்கள் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதும் கேள்விக்குறியே. அதிருப்திக்கு அப்பால் எதிர்க்கட்சித் தலைவர் மீது அனுதாபம் ஏற்படுத்தவும் இந்த நெருக்கடிகளால் வாய்ப்புள்ளது. ஆனபோதும் கடைசி சுற்றில் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறைக்கு உள்ளேயோ வெளியேயோ முடக்குவதன் மூலம், பாஜகவின் அடுத்த அரசியல் புறப்பாடுக்கு அடித்தளமிடப் பார்க்கிறார்கள்.
தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்ததில் இயல்பாக எழும் அதிருப்தி வாக்குகளை திசை மாற்றுவது, பெரிதாய் எழாத மோடி அலைக்கு மாற்று சமைப்பது, எதிர்க்கட்சிகள் ஒரே குடையில் சேரும் இந்தியா கூட்டணிக்கு இயன்ற அளவு சேதம் விளைவிப்பது, கைதாகும் தலைவர்களுக்கு எதிராக இணையவெளியில் எதிர்ப் பிரச்சாரத்தை முடுக்குவது என அடுத்தடுத்த அஜெண்டாக்கள் பாஜக வியூக விற்பன்னர்கள் வசமிருக்கின்றன. ஆனால், அவை நடைமுறையில் எந்தளவுக்கு பலிதமாகும் என்பது, பாஜக தலைமைக்கு அப்பால் ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் வியூகங்களிலும் அடங்கியிருக்கிறது!