எதிர்க்கட்சியாக பாஜக; எங்கே போனது அதிமுக?

எதிர்க்கட்சியாக பாஜக; எங்கே போனது அதிமுக?

‘பிள்ளைங்க இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதை’ன்னு ஒரு பழமொழி சொல்வார்களே... அதற்கு நேர் எதிரான பழமொழி ஒன்று இருந்தால் சொல்லிக்கொள்ளுங்கள். தமிழகத்தின் நிஜ எதிர்க்கட்சியான அதிமுக சோம்பிக்கிடக்க, “தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி நாங்கள்தான்” என்று ஊர் ஊராகப் போய் முழங்கிக்கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

அவர் சொல்வதிலும் பெரிதாக ஒன்றும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. ஆளுங்கட்சியின் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதும், சின்னச் சின்னப் பிரச்சினைகளையும் கையில் எடுத்து அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதும்தான் ஒரு எதிர்க்கட்சியின் பணி என்றால், அதை அதிமுகவைவிட சிறப்பாகவே செய்கிறது பாஜக. 2011 தேர்தல் முடிவில் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தேமுதிகவே என்றாலும், களத்தில் என்னவோ திமுகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அதேநிலைதான் இன்றும்.

என்ன ஆனது அதிமுகவுக்கு?

ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட பேரியக்கம் என்று அதிமுகவினர் சொல்லிக்கொண்டிருப்பது மிகையாக இருக்கலாம். ஆனாலும்கூட, தொண்டர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி அதுதான். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சி, அடுத்த தேர்தலில் 65 தொகுதிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. பண பலம் அதற்கு கைகொடுத்தது என்றாலும்கூட, சட்டப்படி அதிமுகவே இன்று பிரதான எதிர்க்கட்சி. ஆனால், அங்கிருக்கும் தலைவர்கள் தொடங்கி, நிர்வாகிகள் வரையில் திமுகவுடன் சண்டை செய்யாமல், தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், அதிமுகவுக்குள் பெரிய மோதலே நடந்தது. ஓபிஎஸ் கோபித்துக்கொண்டு போன கதையெல்லாம் நமக்குத் தெரியும். இவ்வளவு போராடிப் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதையும் பார்க்கிறோம். ‘அறுக்கமாட்டாதவன் இடுப்புல 58 கருக்கருவா’ என்பார்களே, அப்படித்தானிருக்கிறது பழனிசாமியின் செயல்பாடுகள். 40, 50 ஆண்டு அரசியல் அனுபவம்பெற்ற அதிமுக தலைகளை அரசியலுக்கு வந்தே மூன்றாண்டுகள் கூட ஆகாத அண்ணாமலை ஓவர் டேக் செய்வதை என்னவென்று சொல்வது?

படுத்தே விட்டானய்யா...

அரசியலைப் பொறுத்தவரையில், இதை இவர்தான் செய்ய வேண்டும் என்கிற எந்தக் கணக்கும் இல்லை. பலமுறை அமைச்சராக இருந்த ஒருவரைவிட இளம் அமைச்சர் ஒருவர் துடிப்பாக, சிறப்பாகச் செயல்பட்டு பெயர் வாங்க முடியும். எதிர்க்கட்சி வரிசையிலும் அப்படித்தான். "எதிர்க்கட்சித் தலைவர் நானிருக்க, நீயேன் ஆடுற?" என்றெல்லாம் கேட்க முடியாது.

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தொடர்ந்து 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாகவே இருந்துவிட்டோம். நிறைய அடி வாங்கியிருக்கிறோம். இப்போது ஆளுங்கட்சி. எவனாவது சட்டமன்றத்தில் வம்பிழுக்கட்டும் என்று காத்திருந்தோம். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் நம்மாட்களுடன் சேர்ந்துகொண்டு முதல்வரையும், நம் ஆட்சியையும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சண்டை போடுவான் என்று பார்த்தால், படுத்தேவிட்டானய்யா என்றாகிவிட்டார்கள் இவர்கள். சட்டமன்றமே போர் அடிக்கிறது" என்றார். கொஞ்சம் மிகைப்படுத்துதல் இருந்தாலும், சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அதிலிருக்கும் உண்மை புரியும்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

புலி வாலைப் பிடித்த கதை

மக்கள் கருத்தறிந்துதான் செயல்படவில்லை. சரி, தொண்டர்கள் விருப்பத்துக்கேற்பவாவது அதிமுக தலைமை செயல்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாஜக, பாமகவுடன் ஒட்டு உறவே வைத்துக்கொள்ளக்கூடாது என்றுதான் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பாமக அதுவாக வெளியேறும் வரையில் வாய் திறக்கவே இல்லை கழக ஒருங்கிணைப் பாளர்கள். பாஜக வேண்டாம் என்று சொன்ன அன்வர்ராஜாவைத் தூக்கிக் கடாசிவிட்டு, பாஜகவின் கால்களே கதியென்று அதிமுக கிடக்கிறது என்றொரு கருத்து அதிமுக தொண்டர்களிடையே இருக்கிறது.

"பாஜகவுடனான உறவு புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. விட்டோம் என்றால், வருமானவரித் துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ எல்லாம் பாயும். கூடவே, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும் பாயும். தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும், முறைகேடாகக் குவித்த சொத்துகளையும் காப்பாற்றும் பொருட்டு, தொண்டர்களின் விருப்பத்தையும் மீறி அதிமுக தலைமைகள் பாஜகவை ஆதரிக்கின்றன. பாஜக கை காட்டும் திசையில் நடப்பது மட்டுமே நம்முடைய கடமை என்று நினைக்கிறார்கள் அவர்கள். பாஜகவோ, அதிமுகவையும், அதன் தலைமையையும் பலவீனப்படுத்திவிட்டு தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறது" என்கிறார் அதிமுக முன்னாள் எம்பியான கே.சி.பழனிசாமி.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

"அதிமுகவின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான். அதற்காக எப்படி பாஜகதான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்று சொல்கிறீர்கள்?" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியைக் கேட்டோம். "ஒரு அரசியல் கட்சி, அதுவும் எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒரு அரசியல் கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படுகிறது பாஜக. இன்றல்ல, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி தொடங்கிவிட்டது. மாற்றுக் கட்சியினர் மட்டுமின்றி, அரசியலுக்குப் புதியவர்களும், இளைஞர்களும்கூட பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், கட்சியின் செயல்பாடு வேகமாக இருக்கிறது. இயல்பாகவே திமுகவின் சித்தாந்தங்களுக்கு நேர் எதிரான கட்சி பாஜகதான் என்ற புரிதல் மக்களுக்கு இருக்கிறது. எனவே, திமுக செய்கிற தவறுகளை எங்கள் கவனத்துக்கே எல்லோரும் கொண்டுவருகிறார்கள். நாங்களும் எந்தச் சமரசமும் இல்லாமல், அரசுக்கு எதிராகக் களமாடுகிறோம். அதனால்தான் பாஜக பிரதான எதிர்க்கட்சியாகத் தெரிகிறது" என்றார் அவர்.

"உண்மையான எதிர்க்கட்சியான அதிமுகவைவிட சிறப்பாகச் செயல்படுகிறது பாஜக என்கிறீர்களா?" என்று கேட்டபோது, "ஒரு அரசியல் கட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டியது அதன் கடமை தானே? அதற்காகக் கூட்டணிக் கட்சியைவிட சிறப்பாகச் செயல்படுகிறோம் என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்? நாங்கள் எங்கள் பணியை சிறப்பாகச் செய்கிறோம் அவ்வளவுதான்" என்று முடித்துக்கொண்டார் நாராயணன் திருப்பதி.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

"திமுகவுக்கு பிரதான எதிரி பாஜக தான்" என்று கூறப்படுவது குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியனிடம் கேட்டபோது, "அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதிமுகவின் பெயரை பாஜக என்று மாற்றிவிட்டார்களா? அல்லது அதிமுகவையே பாஜகவின் கிளையாக மாற்றிவிட்டோம் என்று சொல்கிறார்களா? தமிழ்நாட்டில் தனியாக நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாத ஒரு கட்சி, தன்னைத்தானே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்று கூசாமல் சொல்லிக்கொள்ளலாம். மக்கள் அதைக் கேட்டு சிரிப்பார்களே தவிர, சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று முடித்துக்கொண்டார்.

எது எப்படியோ, இப்படியே இருப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல. யானை விழுந்தாலும் குதிரை மட்டம் என்பார்கள். ஆனால், அதிமுகவின் உயரம் ரொம்பக் குறைவாகத் தெரிகிறது. ஒருவேளை, அது பயணித்த குதிரை, அதை கீழேயும் தள்ளி குழியும் பறித்துவிட்டதோ?!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in