கேஜ்ரிவாலைக் கொல்ல பாஜகவினர் முயற்சியா?

கேஜ்ரிவாலைக் கொல்ல பாஜகவினர் முயற்சியா?

ஆம் ஆத்மி கட்சியினர் பகீர் புகார்!

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த சர்ச்சைகளின் உச்சமாக, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன்பு இன்று பாஜகவினரின் உக்கிரமான போராட்டம் நிகழ்ந்தேறியிருக்கிறது. இதையடுத்து, கேஜ்ரிவாலைக் கொல்ல பாஜகவினர் முயற்சிப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1991-ல் நிகழ்ந்த காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, டெல்லி அரசும் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் டெல்லி பாஜக எம்எல்ஏ-க்கள் கோரியிருந்தனர். இதற்கு சட்டப்பேரவையிலேயே பதிலளித்த அர்விந்த் கேஜ்ரிவால், “பாஜகவினர் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு வரிவிலக்கு கோருகின்றனர். பேசாமல் அதை யூடியூபில் வெளியிட்டுவிடலாமே! மொத்தமாகவே படம் இலவசமாகிவிடும். எதற்காக வரிவிலக்கு கோருகிறீர்கள்?” என்று கூறியிருந்தார். “அவ்வளவு அக்கறை இருந்தால் விவேக் அக்னிஹோத்ரியிடம் சொல்லுங்கள். அவர் இப்படத்தை யூடியூபில் போட்டுவிடுவார். எல்லோரும் இலவசமாகப் பார்க்கலாம்” என்றும் கிண்டல் செய்தார்.

இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவரும், காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவருமான அனுபம் கெர், இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்.

இப்படி இப்படம் குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இன்று டெல்லியில் கேஜ்ரிவால் இல்லத்துக்கு முன்பு கூடி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். ‘காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் காட்டும் திரைப்படத்தை கேஜ்ரிவால் அவமதித்துவிட்டார்’ என அவர்கள் கோஷமிட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “தேர்தல் அரசியலில் கேஜ்ரிவாலைத் தோற்கடிக்க முடியாததால், பாஜகவினர் அவரைக் கொலை செய்ய விரும்புகின்றனர்” என்று கூறினார். இந்தப் போராட்டத்துக்கு அரசியலை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது என்றும், இது முழுக்க முழுக்க ஒரு குற்றவியல் சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போலீஸார் முன்னிலையிலேயே முதல்வர் கேஜ்ரிவாலின் வீட்டின் முன்பு கூடி பாஜகவினர் போராட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஆம் ஆத்மி கட்சியினர், பாஜகவினரின் போராட்டத்துக்கும் வன்முறைக்கும் டெல்லி போலீஸார் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.