மத்திய அரசுத்துறைகளை தனது வீட்டுப்பணியாட்கள் போல பாஜக நடத்துகிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

தயாநிதி மாறன் எம்.பி
தயாநிதி மாறன் எம்.பிமத்திய அரசுத்துறைகளை தனது வீட்டுப்பணியாட்கள் போல பாஜக நடத்துகிறது: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

மத்தியில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பில் வந்ததில் இருந்து மத்திய அரசுத்துறைகளைத் தனது வீட்டு பணியாட்கள் போன்று நடத்தி எதிர்கட்சிகளை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது என திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறைச் சோதனை இன்று நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைச் செய்து வரும் நிலையில் திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், ‘’ பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து எதிர்கட்சிகளைப் பழிவாங்க மத்திய அரசுத்துறை நிறுவனங்களைத் தங்களது வீட்டுப் பணியாட்களை வேலை வாங்குவது போல் நடத்திக் கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு எதிராகப் பேசுபவர்கள், அவர்களுக்கு யாரை எல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களை அசிங்கம்படுத்தும் வகையில் பாஜக அரசு நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆருத்ரா நிதி நிறுவனம் மீது ஏன் ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை? இதில், மிகப்பெரிய பண மோசடி நடைபெற்றுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஏழை மக்களின் பணம் ஏமாற்றப்பட்டுள்ளது, அதற்கெல்லாம் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.

தேர்தல் வருகிறது என்பதால் பாஜகவை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் களங்கம் படுத்தும் வேலையில் மத்திய அரசு செயல்படுகிறது. பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் உத்தமர்களா? கர்நாடகாவில் மிகப் பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. நிச்சயம் மக்கள் தக்கப்பாடம் இவர்களுக்குப் புகட்டுவார்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in