மாநிலங்களவையில் தார்மிக பலம் பெறும் பாஜக!

1990-க்குப் பின்னர் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாகிறது
மாநிலங்களவையில் தார்மிக பலம் பெறும் பாஜக!

இதுவரை மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவரும் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் சற்றே பின்னடைவைச் சந்திக்கும். மசோதாவின் தன்மையைப் பொறுத்து எதிர்க்கட்சிகள் மற்றும் நடுநிலை வகிக்கும் கட்சிகள் ஆதரவளித்தால் மசோதா நிறைவேறும். இல்லையெனில் கஷ்டம்தான். இனி அந்தக் கவலை பாஜகவினருக்குக் கிடையாது.

ஆம், மக்களவையில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜக, மாநிலங்களவையிலும் பலம் பெறுகிறது. அசாம், திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களிலிருந்து தலா ஒரு உறுப்பினர் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியிருக்கிறது.

மாநிலங்களவையில் இன்று 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் இருவர் பாஜகவினர். ஒருவர் நாகாலாந்தைச் சேர்ந்த பாங்கோன் கோன்யாக், இன்னொருவர் அசாமைச் சேர்ந்த பபித்ரா மார்கெரிட்டா. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

2014-ல் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 55 தான். இன்றைய தேதியில் மாநிலங்களவையில் 101 பாஜக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதன்படி,1990-க்குப் பிறகு மாநிலங்களவையில் 100-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் முதல் கட்சியாகிறது பாஜக. மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்கள் தேவை.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் பலம் மாநிலங்களவையில் சரிந்துவிட்டது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியடைந்துவிட்ட நிலையில், மாநிலங்களவையில் அதன் பலம் 30-ஆகக் குறைந்திருக்கிறது. எண்ணிக்கை இன்னும் குறைந்ததென்றால், மாநிலங்களவை எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தையும் காங்கிரஸ் இழக்க நேரிடும்.

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்த ஆண்டில் கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல்களில் கிடைக்கும் வெற்றி தோல்வி மாநிலங்களவையில் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, 72 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in