ஜாட் சமூக வாக்கை குறிவைக்கும் பாஜக!- 250 தலைவர்களுடன் அமித்ஷா சந்திப்பு!

உபி தேர்தலில் மேற்குப்பகுதியை தக்கவைக்க முயற்சி
ஜாட் சமூக தலைவர்கள்
ஜாட் சமூக தலைவர்கள்

டெல்லியில் ஜாட் சமூகத்தின் முக்கிய 250 தலைவர்களை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மேற்குப்பகுதி தொகுதிகளை தக்கவைக்கும் பாஜகவி முயற்சியாக உள்ளது.

உபியில் மார்ச் 7 வரை ஏழுகட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் துவங்குகிறது. இதன் மேற்குப்பகுதியில் பிப்ரவரி 10ல் முதல்கட்டமாக 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதே பகுதிகள் உள்ளிட்ட 58 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு கட்ட தேர்தலின் தொகுதிகளில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் 2017 தேர்தலில் பாஜகவிற்கு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. உபியில் ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை முகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஜாட் சமூகத்தினரில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இதன் காரணமாக, டெல்லியில் ஒரு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உபியின் மேற்குப்பகுதியிலும் ஆதரவு கிடைத்தது. ஜாட் சமூகத்தினரின் இந்த ஆதரவால் மத்தியில் ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பாஜக மீது அவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் உபியில் நடைபெறும் தேர்தலிலும் ஜாட் சமூகத்தினர் பாஜகவை எதிர்க்கும் வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சியின் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, ஜாட் சமூகத்தினரை நேரில் பேசி சமாளித்து ஆதரவை தக்கவைக்க பாஜக முயல்கிறது. இதற்காக, ஜாட் சமூகத்தினரின் முக்கிய 250 தலைவர்களுடன் பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரான அமித்ஷாவின் சந்திப்பிற்கு இன்று டெல்லியில் ஏற்பாடாகி உள்ளது. ’சமாஜிக் பைஜாரா சம்மேளன் (சமூக சகோதரத்துவக் கூட்டம்)’ எனும் பெயரில் இந்த சந்திப்பு இன்று நடைபெறுகிறது. உபியின் மேற்குப்பகுதி மாவட்டங்களிலிருந்து ஜாட் தலைவர்கள் பாஜகவின் செலவிலான சிறப்பு வாகனங்களில் டெல்லி வந்தடைந்தனர்.

ஜாட் சமூக தலைவர்கள்
ஜாட் சமூக தலைவர்கள்

இந்த சந்திப்பு, பாஜக எம்.பியான பிரவேஷ் வர்மாவின் அரசு குடியிருப்பில் நடைபெறுகிறது. இதில், ஜாட் சமூகக் கூட்டங்களில் வழக்கமாக இடம்பெறும், ஹுக்கா மற்றும் வெல்லங்களில் செய்த இனிப்புகளுடன் கட்டில்கள் போடப்பட்டுள்ளன.

மேற்குப்பகுதி ஜாட் சமூகத்தின் வாக்குகள் அதன் ஆதரவுக் கட்சியான முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்து வந்தன. இந்த நிலை, முதல்வர் முலாயம்சிங் தலைமையிலான ஆட்சியில் 2013 இல் நிகழ்ந்த முசாபர்நகர் மதக்கலவரத்தால் மாறியது.

இதில், 2014 முதல் ஜாட் சமூகத்தின் ஆதரவை பாஜக அதிகமாகப் பெறத் துவங்கியது. இது 2017 சட்டப்பேரவை தேர்தலிலும், 2019 மக்களவையிலும் தொடர்ந்தது. உபியில் 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு மேற்குப்பகுதியில் மொத்தம் 92 தொகுதிகள் கிடைத்தன. இதையடுத்து, மத்திய அரசின் மூன்று முக்கிய வேளாண் சட்டதிருத்தங்களால் சூழல் மாறத் துவங்கியது,

இதை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மற்றும் அப்பகுதியின் கரும்பு விவசாயிகள் பிரச்சினைகளால் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டது. இதனால், மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றாலும் ஜாட் விவசாயிகளின் கோபம் அடங்கியபாடில்லை. எனவே, தனது தொகுதிகளை இந்த சட்டப்பேரவை தேர்தலில் தக்கவைக்க பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது. இதற்காகவே டெல்லியில் ஜாட் தலைவர்களுடன் நடைபெறும் கூட்டம் பாஜகவிற்கு பலன் அளிக்குமா? என்பது மார்ச் 10ம் தேதி வெளியாகும் முடிவில் தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in