நபிகள் குறித்த சர்ச்சை கருத்து: கைது செய்யப்பட்ட தெலங்கானா எம்எல்ஏவை சஸ்பெண்ட் செய்தது பாஜக!

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து: கைது செய்யப்பட்ட தெலங்கானா எம்எல்ஏவை சஸ்பெண்ட் செய்தது பாஜக!

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக தெலங்கானா எம்எல்ஏ ராஜா சிங் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது பாஜக.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்திய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியை விமர்சிக்கும் வீடியோவை எம்.எல்.ஏ ராஜா சிங் வெளியிட்டார். அதில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும், நபிகளுக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே ராஜா சிங்கைக் கைது செய்யக் கோரி திங்கள்கிழமை இரவு ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் ராஜா சிங்குக்கு பாஜகவின் மத்திய ஒழுங்குக் குழுவின் உறுப்பினர் செயலாளரான ஓம் பதக் அனுப்பிய நோட்டீஸில், “நீங்கள் பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது பாரதிய ஜனதா கட்சியின் அரசியலமைப்பின் 10 (அ) விதி XXV ஐ தெளிவாக மீறுவதாகும். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், நீங்கள் கட்சியிலிருந்தும் உங்கள் பொறுப்புகள்/பணிகளில் இருந்தும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் உங்களை கட்சியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் வெளியிட்ட கருத்துக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது நாடு முழுவதும் பரவலாக கண்டனத்தை பெறத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே நுபுர் சர்மாவின் நபிகள் பற்றிய கருத்துகள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது. எனவே இப்போது பாஜக உடனடியாக ராஜா சிங்கை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in