கட்சியை வளர்க்க கபடியை கையில் எடுக்கும் பாஜக - வியூகம் எடுபடுமா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் கட்சியை குக்கிராமங்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கும் வகையில் பாஜக தமிழர்களின் கலாச்சார, பாரம்பரிய விளையாட்டான கபடியை கையில் எடுத்துள்ளது. இது பலன் தருமா என அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தினம், தினம் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றனர் அக்கட்சியினர். முன்னாள் மாநிலத் தலைவர் எல்.முருகன், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக முருகப்பெருமானின் அடையாளமான வேலை எடுத்துக்கொண்டு போராடினார். முருகப்பெருமான் தமிழ்க் கடவுள் என்னும் சென்டிமெண்ட் அதற்கான காரணமாக இருந்தது. அதற்குக் கைமேல் பலன் கிடைத்து தமிழக பாஜகவுக்கு நான்கு எம்.எல்.ஏக்களும் கிடைத்தனர்.

இதேபோல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகம் வரும்போதெல்லாம் திருக்குறள் மேற்கோள்களைச் சொல்லத் தவறுவது இல்லை. அந்தவகையில் கலாச்சார ரீதியில் உளவியல் அடிப்படையில் தமிழர்களை அணுக பாஜக தொடர்ந்து முயற்சித்தே வருகிறது. அந்தவரிசையில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களில் மிக முக்கியமான ஒன்று கபடி. இதையும் இப்போது கையில் எடுத்துள்ளது பாஜக. இதன்மூலம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை கலாச்சார ரீதியாக உள்நுழைய முடியும் எனக் கணக்குப் போடுகிறது பாஜக.

அந்தவகையில் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் மாவட்ட, மாநில அளவில் கபடி போட்டிகளை நடத்துகிறது. இதில் மாவட்ட அளவில் வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம், இரண்டாவது பரிசு 50 ஆயிரம், மூன்று, நான்காவது பரிசுகள் தலா 25 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் வெல்வோர் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். மாநில அளவிலான கபடி போட்டிக்கு முதல் பரிசாக 15 லட்சம், இரண்டாம் பரிசாக 10 லட்சம், மூன்று, நான்காவது பரிசாக தலா 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு மோடி கபடி லீக் என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இந்தப் போட்டி வரும் 17, 18,19 ஆம் தேதிகளில் திருநயினார்குறிச்சியில் நடக்கிறது. இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிபோல் இது தென்மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என பாஜக கணக்குப் போடுகிறது. பாஜகவின் கபடி வியூகம் பலன் தருமா என்பது போக, போகத்தான் தெரியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in