‘ஒருபுறம் கோட்சேவுக்கு கோஷம்... மறுபுறம் காந்தி ஆசிரமத்தில் வெளிநாட்டினர்’ - பாஜகவை வறுத்தெடுத்த சிவசேனா

‘ஒருபுறம் கோட்சேவுக்கு கோஷம்... மறுபுறம் காந்தி ஆசிரமத்தில் வெளிநாட்டினர்’ - பாஜகவை வறுத்தெடுத்த சிவசேனா

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 21-ல் குஜராத் தலைநகர் அகமதாபாத் சென்றிருந்தார். அங்கு மகாத்மா காந்தியின் சாபர்மதி ஆசிரமம், அக்‌ஷர்தாம் கோயில், அதானி குழுமத்தின் தலைமையகம் போன்ற இடங்களுக்குச் சென்றார். காந்தி ஆசிரமத்தில் அரை மணி நேரத்தைக் கழித்த அவர், அங்கு ராட்டையும் சுற்றினார்.

இந்நிலையில், காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் பாஜகவினர், மறுபுறம் வெளிநாட்டுத் தலைவர்களை காந்தி ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் என சிவசேனா கட்சி விமர்சித்திருக்கிறது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் இது தொடர்பாக வெளியான தலையங்கத்தில் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

‘பாஜக நாதுராம் கோட்சேயைப் போற்றுகிறது. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை காந்தியின் சாபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று ராட்டை சுற்றவைக்கிறது. இரும்பு மனிதர் சர்தார் படேலுக்கு குஜராத்திலேயே பிரம்மாண்டமான சிலையை எழுப்பியிருந்தாலும், போரிஸ் ஜான்சன் மற்றும் பிற வெளிநாட்டு விருந்தினர்கள் அங்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. ஏனெனில், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக காந்திதான் இன்னமும் இருக்கிறார்’ என்று ‘சாம்னா’ தலையங்கம் சாடுகிறது.

சமீபகாலமாக, மத அடிப்படையில் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்களையும் ‘சாம்னா’ கண்டித்திருக்கிறது. குறிப்பாக, பிரிட்டன் பிரதமரின் வருகையின்போது டெல்லி உட்பட பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

‘நாடு சுதந்திரம் அடைந்தபோது மதரீதியாக வெறுப்பும் வன்முறையும் கலந்த சூழல் நிலவியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டன் பிரதமர் இந்தியாவில் அதேபோன்ற சூழலைக் காண்கிறார். பிரிட்டிஷ் அரசு விட்டுச்சென்ற அதே நிலையில், இந்தியா இன்னமும் இருப்பதை போரிஸ் ஜான்சன் பார்த்திருப்பார்’ என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறது சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in