முதல்வரின் போஸ்டரை கிழித்தெறிந்த பாஜகவினர்: நள்ளிரவு போராட்டத்தால் பரபரப்பு!

முதல்வரின் போஸ்டரை கிழித்தெறிந்த பாஜகவினர்: நள்ளிரவு போராட்டத்தால் பரபரப்பு!

திமுக போஸ்டர்களை அகற்றும் வரை ஓயமாட்டோம் என பாஜகவினர் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்ததால் கோவையில் பரபரப்பு நிலவியது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. போஸ்டர்கள் அகற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை, அவினாசி சாலை மேம்பால தூண்களில் திமுகவின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் இருந்தது. அதே வேளையில் அந்த தூண்களில் பிற கட்சியினரின் போஸ்டர்களை ஓட்டுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில், அவினாசி சாலையில் பீளமேடு கொடிசியா அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.கவினரிடம் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய திமுக போஸ்டர்களை பா.ஜ.கவினர் கிழித்து எறிந்தனர்.

திமுக போஸ்டர்களை கிழித்த பா.ஜ.கவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போஸ்டர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் காவல்துறையினரின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனத்திலிருந்து பாஜகவினரை காவல்துறையினர் இறக்கிவிட்டனர். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்ததால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in